Last Updated : 01 Jul, 2018 12:56 PM

 

Published : 01 Jul 2018 12:56 PM
Last Updated : 01 Jul 2018 12:56 PM

பெரும் சோகம்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் கண்ணைக் கட்டிக்கொண்டு தூக்கிட்டு தற்கொலை

 

டெல்லியின் வடபகுதியில் உள்ள சாந்த் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் கண்ணைக் கட்டிக்கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தற்கொலை செய்துள்ளதில், 7 பெண்கள், 4 ஆண்கள் அடங்கும்.

டெல்லியின் வடக்குப்பகுதியில் சாந்த் நகர் அமைந்துள்ளது. இங்குள்ள புராரி பகுதியைச் சேர்ந்தவர்கள் பூபிந்தர் அவரின் சகோதரர் லலித் சிங். இருவரின் குடும்பத்தினரும் அப்பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

இதில் பூபிந்தர் பலசரக்கு கடையும், லலித் சிங் தச்சுவேலையும் செய்து வந்தனர். பலசரக்குக் கடை வழக்கம் போல் காலை 6 மணிக்குத் திறக்கப்பட்டுவிடும். ஆனால், காலை 7.30 மணிஆகியும் திறக்கப்படவில்லை. இதனால், அக்கம்பகத்தினர் சந்தேகமடைந்து, பூபிந்தர் வீட்டுக்கதவைத் தட்டியுள்ளனர். நீண்டநேரமாகியும் திறக்கப்படாததையடுத்து, போலீஸுக்கு தகவல் கொடுத்தனர்.

போலீஸார் வந்து கதவை உடைத்துப் பார்த்தபோது, குடும்பத்தில் உள்ள 7 பெண்கள், 4 ஆண்கள் உள்ளிட்ட 11 பேரும் இரும்பு உத்தரத்தில் தூக்குமாட்டி தற்கொலை செய்திருந்தனர். அவர்களின் கண்கள் கட்டப்பட்டு, கைகள் கட்டப்படு, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்தது. அவர்கள் வீட்டிலும் எந்தவிதமான தற்கொலைக்கடிதமும் இல்லை.

இதையடுத்து, 11பேரின் உடலையும் மீட்டு, போலீஸார் உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடற்கூறு ஆய்வு அறிக்கை வந்தபின், தற்கொலையா அல்லது யாரேனும் கொலை செய்திருக்கிறார்களா என்பது தெரியவரும் என போலீஸார் தெரிவித்தனர்.

இது குறித்து சாந்த் நகர் போலீஸ் இணை ஆணையர் ராஜேஷ் குராணா கூறுகையில், நாங்கள் வீட்டுக்குள் சென்றபோது, சிலர் தூக்குமாட்டி தொங்கிக்கொண்டு இருந்தனர், சிலர் கைகள், கால்கள் கட்டப்பட்ட நிலையில், கீழே படுத்திருந்தனர்.

முதல்கட்டமாக இது தற்கொலை என்ற சந்தேக்கிறோம். ஆனாலும் விசாரணை நடத்தி வருகிறோம், உடற்கூறு அறிக்கை கிடைத்தபின், அடுத்த கட்டமாக விசாரணை தொடங்கும். மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களையும் ஆய்வு செய்து வருகிறோம்.

இந்தத் தற்கொலையில் 7 பெண்கள், 4 ஆண்கள். இதில் 3 பேர் இளம் வயதினர். தற்கொலை செய்து கொண்டவர்களிடம் இருந்து எந்தவிதமான தற்கொலைக்கடிதமும் கைப்பற்றப்படவில்லை எனத் தெரிவித்தார்.

பூபேந்தர் குடும்பம் குறித்து அவரின் வீட்டின் அருகே வசிப்பவர் ஒருவர் கூறுகையில், லலித், பூபேந்தர் இருவரும் நன்கு பழகக்கூடியவர்கள். கடையை நேற்று இரவு பூட்டும்போது கூட மகிழ்ச்சியாகத்தான் காணப்பட்டனர். எந்தவிதமான அழுத்தத்துடன் இல்லை. ஆனால், காலை 6 மணிக்குத் திறக்கப்படும் கடை 7 மணிக்கு மேல் ஆகியும் திறக்கப்படாத காரணத்தால், சந்தேகமடைந்து போலீஸுக்கு தகவல் அளித்தோம். ஆனால், இப்படிப்பட்ட முடிவை எடுப்பார்கள் என எதிர்பார்க்கவில்லை என வேதனையுடன் தெரிவித்தார்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் தற்கொலை செய்த கொண்ட சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x