மன்மோகன் சிங் விரும்பி வாங்கிய மாருதி 800 கார் | நினைவலை

மன்மோகன் சிங் விரும்பி வாங்கிய மாருதி 800 கார் | நினைவலை
Updated on
1 min read

உ.பி.யில் சமூக நலன் மற்றும் எஸ்சி, எஸ்டி நலத்துறை இணை அமைச்சராக பதவி வகிக்கும் அசீம் அருண், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஆவார். 1994-ல் ஐபிஎஸ் தேர்ச்சி பெற்ற இவர் உ.பி. கேடர் அதிகாரி ஆனார். இவர், மத்திய அரசு அயல்பணியில் மன்மோகனுக்கு எஸ்பிஜியின் உள்கட்ட நிழல் பாதுகாவலராக 3 ஆண்டுகள் பணியாற்றி உள்ளார். இந்நிலையில் விருப்ப ஓய்வு பெற்று பாஜகவில் சேர்ந்த அவர், உ.பி.யின் கன்னோஜ் தொகுதி எம்எல்ஏ ஆனார்.

சமூக வலைதளத்தில் அசீம் அருண் கூறியிருப்பதாவது: டாக்டர் சாஹேப் சொந்தமாக ஒரே ஒரு மாருதி 800 கார் மட்டுமே வைத்திருந்தார். இது, அவரது பிரதமர் இல்லத்தில் பிஎம்டபுள்யு காரின் பின்புறம் நிற்கும். "எனக்கு இந்த சொகுசுக் காரில் பயணம் செய்ய விருப்பமில்லை.

மாறாக எனது கார் என்றால் அது மாருதி 800 தான்" என்று அவர் தொடர்ந்து கூறி வந்தார். இதற்கு நான், "சொகுசுக்காக அல்லாமல் பாதுகாப்புக்காக என்பதால் பிஎம்டபுள்யு காரை எஸ்பிஜி பரிந்துரைத்தது" என கூறினேன். எனினும், சாலைகளில் கடக்கும் மாருதி 800 கார்கள் மீது அவரது மனமார்ந்தப் பார்வை படத்தவறாது. தான் ஒரு நடுத்தர வகுப்பினர் என்பதால் பொதுஜனம் பற்றி கவலைப்படுவது தனது பணி என்றும் அவர் குறிப்பிடுவது உண்டு. இவ்வாறு அசீம் அருண் கூறியுள்ளார்.

தனது அரசியல் வாழ்க்கையிலும் மன்மோகன் சிங் எளிமையையே கடைப்பிடித்து வந்ததாக பல தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். எந்த ஆர்பாட்டமும் இன்றி ஒரு தலைவரால் சாதிக்க முடியும் என்பதற்கு முன்னுதாரணமாக மன்மோகனின் வாழ்க்கை இருந்ததாக அந்தப் பாராட்டுகளில் பதிவாகி உள்ளது.

ஆர்எஸ்எஸ் இரங்கல்: எக்ஸ் தளத்தில் ஆர்எஸ்எஸ் வெளியிட்டுள்ள பதிவில், “டாக்டர் சர்தார் மன்மோகன் சிங் மறைவால் ஒட்டுமொத்த நாடும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. அவரது குடும்பத்தினர் மற்றும் அன்புக்குரியவர்களுக்கு ஆர்எஸ்எஸ் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறது. எளிய பின்புலத்தில் இருந்து வந்தாலும் நாட்டின் உயரிய பதவியை மன்மோகன் வகித்துள்ளார். இந்தியாவுக்கான அவரது பங்களிப்பு என்றென்றும் நினைவுகூரப்படும். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in