ம.பி.யில் ரயில் சக்கரங்களுக்கு நடுவே 250 கி.மீ. தூரம் பயணித்த நபரிடம் விசாரணை

ம.பி.யில் ரயில் சக்கரங்களுக்கு நடுவே 250 கி.மீ. தூரம் பயணித்த நபரிடம் விசாரணை
Updated on
1 min read

ஜபல்பூர்: மத்தியபிரதேசத்தில் ரயிலுக்கு அடியில் சக்கரங்களுக்கு நடுவே ஒருவர் 250 கி.மீ. தூரம் பயணம் செய்துள்ளார். ம.பி.யின் ஜபல்பூர் ரயில் நிலையத்தில் ரயில் பெட்டிகளின் கீழ் ரயில்வே ஊழியர்கள் நேற்று வழக்கமான ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஒரு ரயிலில், ஒரு பெட்டியின் கீழே சக்கரங்களுக்கு நடுவில் ஒருவர் மறைந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து அந்த நபரை பிடித்து விசாரித்தனர். இதில் அந்த நபர், இடார்சியில் இருந்து 250 கி.மீ. தூரம், அதாவது 4 மணி நேரத்துக்கும் மேலாக இவ்வாறு பயணித்ததாக கூறியதை கேட்டு மேலும் அதிர்ந்தனர்.

இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், “புனே-தானாபூர் விரைவு ரயிலின் ஏசி-4 பெட்டியின் கீழே வழக்கத்துக்கு மாறான அசைவுகளை ரயில்பெட்டி மற்றும் வேகன் துறையை சேர்ந்த ஊழியர்கள் கவனித்தனர். இதையடுத்து ரயிலை நிறுத்துமாறு லோகோ பைலட்டிடம் கூறினர். சக்கரங்களுக்கு நடுவில் ட்ராலி பிரிவில் பதுங்கியிருந்த நபரை வெளியே வரவழைத்தனர். பிறகு அவரை பிடித்து ஆர்பிஎப் போலீஸாரிடம் ஒப்படைத்தனர்" என்றார்.

விசாரணையில், ஜபல்பூர் வருவதற்கு ரயில் டிக்கெட் வாங்க பணம் இல்லாததால் இவ்வாறு வந்ததாக அந்த நபர் கூறியுள்ளார். அவரது பதில்கள் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என்பதையும் சுட்டிக்காட்டியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த நபரிடம் ஜபல்பூர் ஆர்பிஎப் போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in