Last Updated : 07 Jul, 2018 04:39 PM

 

Published : 07 Jul 2018 04:39 PM
Last Updated : 07 Jul 2018 04:39 PM

மெஹ்ரம் இன்றி முதன்முறையாக 1,308 இந்தியப் பெண்கள் ஹஜ் பயணம்

பெண்கள் ஹஜ் எனும் புனித யாத்திரை செல்லும் பாரம்பரிய முறையில் இந்த வருடம் முதல் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதுபோல், முதன்முறையாக கணவர் அல்லது ரத்த சம்பந்தம் உள்ளவர்கள் துணையின்றி 1,308 பெண்கள் இந்த வருடம் ஹஜ் செல்கின்றனர்.

இஸ்லாமியர்களின் ஷரீயத் முறைப்படி பெண்கள் தம் கணவர் அல்லது ரத்த சம்பந்தமான உறவுகளுடன் மட்டுமே வீட்டை விட்டு வெளியில் செல்ல வேண்டும் என உள்ளது. இதை மெஹரம் முறை எனக் கூறுகிறார்கள். எனினும், மாறி வரும் காலத்திற்கு ஏற்ப பெண்கள் தனியாக வெளியில் செல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உலகின் பெரும்பாலான நாடுகளில் நடைமுறையில் உள்ளது.

ஆனால், ஹஜ் யாத்திரை செல்வதில் மட்டும் இந்த மெஹ்ரம் முறையை சவுதி அரசு தவறாமல் கடைப்பிடித்து வந்தது. தம் நாட்டில் அமைந்துள்ள மெக்காவிற்கு புனித யாத்திரை வரும் பெண்களை, மெஹ்ரம் முறையில் மட்டுமே சவுதி அனுமதித்து வந்தது. கடந்த வருடம் இந்த மெஹ்ரம் முறையை சவுதி அரசு விலகிக் கொண்டது. இதை அடுத்து இந்த வருடம் ஹஜ் புனித யாத்திரைக்கு இந்தியாவில் இருந்து மொத்தம் 1,308 பெண்கள் மெஹ்ரம் இன்றி முதன்முறையாகச் செல்கின்றனர்.

இந்தப் பெண்களுக்காக சவுதி அரசு கூடுதலாக பெண் ஹஜ் அமைப்பாளர்கள் அமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களுடன் ஹஜ் உதவியாளர்கள், காதிம் உல் ஹுஜாஜ், மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களும் அதிக அளவில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

ஜுலை 14-ம் தேதி முதல் இந்தியாவில் ஹஜ் புனித யாத்திரை தொடங்குகிறது. ஜூலை 30 வரை செல்லும் இந்த இந்திய யாத்ரீகர்கள் எண்ணிக்கை மொத்தம் 1,75,025 ஆகும். இந்த எண்ணிக்கை சுதந்திர இந்தியாவில் மிகவும் அதிகம். இதில் பெண்கள் எண்ணிக்கை சுமார் 47 சதவீதம் ஆகும்.

இது குறித்து மத்திய சிறுபான்மைத்துறை அமைச்சரான முக்தார் அப்பாஸ் நக்வீ கூறும்போது, ''மத்திய அரசு ஹஜ் மானியம் ரத்து செய்தும், சவுதி அரசு சாலை, மின்சாரம் என பலவகை வரிகள் புதிதாக விதித்த பிறகும் அதன் யாத்ரீகர்கள் எண்ணிக்கை இந்த வருடம் இந்தியாவில் அதிகரித்துள்ளது. இந்தமுறை பயணத்திற்காக அவர்களுக்கு கூடுதலாக எந்த செலவும் அதிகரிக்கவில்லை'' எனத் தெரிவித்தார்.

இந்தியாவின் அனைத்து மாநிலங்களை விட அதிகமாக டெல்லியில் இருந்து சுமார் 19,000 யாத்ரீகர்கள் ஹஜ் செல்கின்றனர். உ.பி.யின் லக்னோவில் 14,500, மும்பையில் 14,200, கொச்சினில் 11,700, கொல்கத்தாவில் 11,610, ஸ்ரீநகரில் 8,950, ஐதராபாத்தில் 7,600, அகமதாபாத்தில் 6,700, பெங்களூருவில் 5,570, பிஹாரின் கயாவில் 5,140, சென்னையில் 4000, வாரணாசியில் 3,250, நாக்பூரில் 2,800, ராஞ்சியில் 2,100, கோவாவில் 450, மற்றும் மங்களூரில் 430, போபாலில் இருந்து 254 பேர் செல்கின்றனர்.

கடந்த ஜனவரியில் மத்திய அரசு ஹஜ் மானியத்தை ரத்து செய்தது. எனினும், ஹஜ் மானியத்தை தமிழக அரசு ரூ.6 கோடி கடந்த 3 ஆம் தேதி அதன் சட்டப்பேரவையில் அறிவித்திருப்பது நினைவுகூரத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x