கும்பமேளாவுக்கு தீவிரவாத அச்சுறுத்தல்: உ.பி. போலீஸார் வழக்கு பதிவு
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் தொடங்கவுள்ள மகா கும்பமேளாவுக்கு தீவிரவாத அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் ஆண்டுதோறும் கும்பமேளாவும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா கும்பமேளாவும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இங்குள்ள திரிவேணி சங்கமத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடுவது வழக்கம்.
இந்நிலையில் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா வரும் ஜனவரி 13-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 26 வரை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை உ.பி. அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் ஜனவரி 14-ம் தேதி மகர சங்காந்தி, ஜனவரி 29-ம் மவுனி அமாவாசை, பிப்ரவரி 3-ம் தேதி வசந்த பஞ்சமி உள்ளிட்ட முக்கிய நாட்களில் கும்பமேளாவில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்படும் என ஒருவர் அச்சுறுத்தல் விடுக்கும் வீடியோ 'எக்ஸ்' தளத்தில் வெளியானது. டிசம்பர் 24-ம் தேதி பரவலாகப் பகிரப்பட்ட அந்த வீடியோவில் இந்து மதம் மற்றும் அரசியல் பிரமுகர்களுக்கு எதிரான இழிவான கருத்துக்களும் இருந்தன.
இதையடுத்து இந்த அச்சுறுத்தல் தொடர்பாக பிலிபித் மாவட்ட சைபர் காவல் நிலையத்தில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
