மத்திய பிரதேசத்தில் ஓய்வுபெற்ற காவலரின் ரூ.8 கோடி சொத்துகள் பறிமுதல்

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

மத்திய பிரதேசத்தில் லோக் ஆயுக்தா போலீஸார் நடத்திய சோதனையில், ஓய்வுபெற்ற காவலருக்கு சொந்தமான ரூ.8 கோடி மதிப்பிலான அசையும் சொத்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மத்திய பிரதேசத்தில் அரசு மருத்துவராக பணியாற்றிய ஆர்.கே.சர்மா, 2015-ல் உயிரிழந்தார். இதையடுத்து, அவரது மகன் சவுரப் சர்மாவுக்கு கருணை அடிப்படையில் மாநில போக்குவரத்து துறையில் காவலர் பணி வழங்கப்பட்டது. அவர் கடந்த 2023-ம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்றார். இவர் பணியில் இருந்தபோது ஊழல் செய்ததாகவும் இதன்மூலம் சம்பாதித்த பணத்தைக் கொண்டு, தாய், மனைவி உள்ளிட்ட குடும்பத்தினர், நண்பர்கள் பெயரில் பள்ளிக்கூடம், ஓட்டல் என ஏராளமான சொத்துகளை வாங்கியதாக புகார் எழுந்துள்ளது.

இதையடுத்து, போபால் நகரில் உள்ள சவுரப் சர்மா வீடு மற்றும் அவருடன் தொடர்புடைய பல்வேறு இடங்களில் கடந்த 18 மற்றும் 19 தேதிகளில் லோக் ஆயுக்தா சிறப்பு போலீஸார் சோதனை நடத்தினர். இதில் ரூ.2.87 கோடி ரொக்கம், 234 கிலோ வெள்ளி பொருட்கள், வாகனங்கள் உட்பட மொத்தம் ரூ.7.98 கோடி மதிப்பிலான அசையும் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த தகவலை லோக் ஆயுக்தா காவல் துறை இயக்குநர் ஜெய்தீப் பிரசாத் தெரிவித்தார். மேலும் இது தொடர்பாக, விசாரணைக்கு ஆஜராகுமாறு சவுரப் சர்மா, அவரது மனைவி, தாய் மற்றும் நண்பர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், சவுரப் நண்பரின் வீட்டில் வருமான வரித் துறை அதிகாரிகள் கடந்த 19-ம் தேதி நடத்திய சோதனையில், அவருடைய காரில் இருந்து ரூ.10 கோடி ரொக்கம், 50 கிலோ தங்கம் மற்றும் நில ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in