தற்கொலையை தடுத்து, போலீஸ் பாதுகாப்பு வழங்கியதற்கு ரூ.9.91 லட்சம் செலுத்த விவசாயிக்கு நோட்டீஸ்

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

ராஜஸ்தானில் விவசாயி ஒருவரின் தற்கொலையை தடுத்து, பாதுகாப்பு வழங்கியதற்காக ரூ.9.99 லட்சம் கட்டணம் செலுத்த அந்த மாநில காவல் துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

ராஜஸ்தானின் ஜுன்ஜுனு மாவட்டம், கோத்டா பகுதியில் சிமென்ட் ஆலை அமைக்க சில ஆண்டுகளுக்கு முன்பு மாநில அரசு அனுமதி வழங்கியது. இந்த இடத்தில் விவசாயி வித்யாகர் யாதவ் குடும்பத்துக்கு சொந்தமான பூர்விக வீடு மற்றும் வயல் அமைந்துள்ளது.

வீடு, வயலுக்காக சிமென்ட் ஆலை தரப்பில் ரூ.3.5 கோடியை இழப்பீடாக வழங்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதை ஏற்க மறுத்த வித்யாகர் யாதவ் ரூ.6 கோடி இழப்பீட்டு தொகையை கோரி வருகிறார். இந்த இழப்பீட்டு தொகையை வழங்காவிட்டால், குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வோம் என்று அவர் அறிவித்தார். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கு அவர் கடிதமும் அனுப்பினார். இதைத் தொடர்ந்து கடந்த 11-ம் தேதி சிமென்ட் ஆலை முன்பு அவரும் அவரது குடும்பத்தினரும் தற்கொலை செய்து கொள்ள முயன்றனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸார், வித்யாகர் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினரை காப்பாற்றினர். இதன்பிறகு மாநில காவல் துறை சார்பில் விவசாயி வித்யாகர் யாதவ் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டது. இதற்காக ரூ.9.91 லட்சம் கட்டணம் செலுத்த ஜுன்ஜுனு மாவட்ட காவல் துறை சார்பில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. அந்த நோட்டீஸில், “ஒரு ஏஎஸ்பி, 2 டிஎஸ்பி, 2 இன்ஸ்பெக்டர்கள், 3 சப்-இன்ஸ்பெக்டர்கள், 6 துணை சப்-இன்ஸ்பெக்டர்கள், 18 தலைமை காவலர்கள், 67 போலீஸார் உங்களுக்கு பாதுகாப்பு வழங்கி உள்ளனர். இதற்காக ரூ.9.91 லட்சத்தை அரசு கருவூலத்தில் 7 நாட்களுக்குள் செலுத்த வேண்டும்" என்று கூறப்பட்டு உள்ளது.

இதுகுறித்து விவசாயி வித்யாகர் யாதவ் கூறும்போது, “எங்கள் வீடு, வயலை சிமென்ட் ஆலை நிர்வாகத்தினர் ஆக்கிரமித்து உள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக குடும்பத்தோடு தற்கொலைக்கு முயன்றோம். போலீஸார் எங்களை தடுத்து நிறுத்தினர். தற்போது ரூ.9.91 லட்சம் கட்டணம் கேட்கின்றனர். என் மீது வழக்கும் தொடரப்பட்டு இருக்கிறது" என்று தெரிவித்தார்.

இதுகுறித்து சிமென்ட் ஆலை நிர்வாகிகள் கூறும்போது, “விவசாயி வித்யாகர் யாதவ் முதலில் கோரிய இழப்பீடு தொகையை வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால் அவர் அவ்வப்போது இழப்பீடு தொகையை உயர்த்தி கொண்டே செல்கிறார். அவர் முதலில் ஒப்புக் கொண்ட தொகையை வழங்க இப்போதும் தயாராக இருக்கிறோம். சம்பந்தப்பட்ட இடத்தில் இருந்து அவரை நாங்கள் வெளியேற்றவில்லை. அரசு நிர்வாகம்தான் வெளியேற்றியது" என்று தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in