71,000+ பேருக்கு வேலைவாய்ப்பு - நாளை நியமன கடிதங்களை வழங்குகிறார் பிரதமர் மோடி

71,000+ பேருக்கு வேலைவாய்ப்பு - நாளை நியமன கடிதங்களை வழங்குகிறார் பிரதமர் மோடி
Updated on
1 min read

புதுடெல்லி: மத்திய அரசு துறைகள் மற்றும் அமைப்புகளில் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள 71,000க்கும் மேற்பட்டோருக்கு பிரதமர் நரேந்திர மோடி நாளை(டிசம்பர் 23) நியமனக் கடிதங்களை வழங்க உள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ரோஜ்கர் மேளாவின் கீழ் பிரதமர் நரேந்திர மோடி 71,000 க்கும் மேற்பட்ட நியமனக் கடிதங்களை டிசம்பர் 23 ஆம் தேதி காலை 10:30 மணியளவில் வீடியோ கான்பரன்சிங் மூலம் புதிதாகப் பணியமர்த்தப்பட்டவர்களுக்கு வழங்கவிருக்கிறார். இந்நிகழ்வில் அவர் கூட்டத்தில் உரையாற்றவுள்ளார்.

ரோஜ்கர் மேளா என்பது வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு அதிக முன்னுரிமை அளிக்கும் பிரதமரின் உறுதிமொழியை நிறைவேற்றுவதற்கான ஒரு படியாகும். தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கும் சுய அதிகாரமளிப்பதற்கும் இளைஞர்களுக்கு அர்த்தமுள்ள வாய்ப்புகளை வழங்கும்.

ரோஜ்கர் மேளா நாடு முழுவதும் 45 இடங்களில் நடைபெறும். மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கான ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. நாடு முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய பணியாளர்கள், உள்துறை அமைச்சகம், தபால் துறை, உயர் கல்வித் துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், நிதிச் சேவைகள் துறை உள்ளிட்ட பல்வேறு அமைச்சகங்கள்/துறைகளில் சேருவார்கள்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in