நீதித்துறை நியமன மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்

நீதித்துறை நியமன மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
Updated on
1 min read

தேசிய நீதித்துறை நியமன ஆணைய மசோதாவும், அது தொடர்பான அரசியல் சாசன சட்டத்திருத்த மசோதாவும் மக்களவையில் புதன் கிழமை நிறைவேற்றப்பட்டன.

உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் நீதிபதிகளை நியமிக்கும் நடவடிக்கைகளை இப்போது நீதிபதிகளை கொண்ட ‘கொலீஜியம்’ என்ற குழு மேற் கொண்டு வருகிறது அதற்குப் பதிலாக, நீதிபதிகள் நியமனம், பணியிட மாற்றம் உள்ளிட்டவற்றை தேசிய நீதித்துறை நியமன ஆணையம் மேற்கொள்வதற்கு இந்த மசோதாக்கள் வகை செய்கின்றன.

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, நீதித்துறை நியமன ஆணையத்துக்கு தலைமை வகிப்பார். இந்த ஆணையத்தில் உச்ச நீதிமன்றத்தைச் சேர்ந்த 2 நீதிபதிகள், மத்திய சட்டத்துறை அமைச்சர், சமூகத்தில் மிகவும் மதிக்கப்படும் 2 பேர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள்.

சமூகத்தில் மதிக்கப்படும் 2 பேரை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் அல்லது அதிக உறுப்பினர்களைக் கொண்ட எதிர்க்கட்சியின் தலைவர் ஆகியோரைக் கொண்ட குழு தேர்ந்தெடுக்கும்.

இந்த மசோதாக்கள் மக்களவை யில் திங்கள்கிழமை அறிமுகம் செய்யப்பட்டன. புதன்கிழமை விவாதத் துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

அப்போது காங்கிரஸ் முன்வைத்த ஒரு திருத்தத்தை மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ஏற்றுக்கொண்டார். இதையடுத்து எந்தவிதமான எதிர்ப்புமின்றி, குரல் வாக்கெடுப்பின் மூலம் தேசிய நீதித்துறை நியமன ஆணைய மசோதா நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்த ஆணையத்தை அமைப்பதற்கு ஏதுவாக அரசியல் சாசனத்தின் 99-வது சட்டத்திருத்த மசோதாவும் எவ்விதமான எதிர்ப்பு மின்றி நிறைவேற்றப்பட்டது. அதற்கு 367 உறுப்பினர்கள் ஆதரவு அளித்தனர்.

நீதித்துறை நியமன ஆணைய மசோதா குறித்து மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பேசியதாவது:

அனுபவம், தகுதி, திறமை வாய்ந்தவர்கள் மட்டுமே நீதிபதிகளாக தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த மசோதாக்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. சிறந்த நீதிபதிகள், வழக்கறிஞர்கள் பற்றிய விவரங்களைத் தொகுத்து வைப்பதற்கான நடவடிக்கையை எடுக்கவுள்ளேன். உயர் நீதிமன்ற மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளை, இந்தப் பட்டியலில் இருந்து நீதித்துறை நியமன ஆணையம் தேர்ந்தெடுப்பது எளிமையாக இருக்கும்.

இந்த ஆணையத்தைக் கொண்டு வருவதன் மூலம் நீதித்துறை யின் சுதந்திரம் பாதிக்கப்படாது. நீதித்துறையின் புனிதத்தன்மையை யும், கண்ணியத்தையும் காப்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.

தற்போதுள்ள ‘கொலீஜியம்’ முறையின்படி நல்ல நீதிபதிகள் பலர், உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற முடியாத நிலை உள்ளது” என்றார்.

இந்த இரண்டு மசோதாக்களும் மாநிலங்களவைக்கு விரைவில் அனுப்பி வைக்கப்படும். அங்கு நிறை வேற்றப்படும்பட்சத்தில் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்ற பின் சட்டமாக்கப்படும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in