

“காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு தொடர்பாக கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ள மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு மத்திய அரசிதழில் வெளியிடப் பட்டதன் தொடர்ச்சியாக, காவிரி மேலாண் வாரியம் மற்றும் காவிரி நீர் வரையறைக் குழு அமைக்கப்பட வேண்டியது அவசியமாகியுள்ளது. இந்நிலையில் “இந்த குழுக்கள் தேவையற்றது. இவை மாநில அரசின் அதிகாரத்தில் தலையிடும் செயல்,” என்று கூறி, உச்ச நீதிமன்றத்தில் கர்நாடகம் வழக்கு தாக்கல் செய்திருந்தது.
அதற்கு, தமிழக அரசு சார்பில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் கூறியிருப்பதாவது:
காவிரி நடுவர் மன்ற இடைக்கால தீர்ப்பு 2007-ல் வெளியானது. பில்லிகுண்டுலுவில் தமிழகத்துக்கு 192 டிஎம்சி அடி நீர் மற்றும் கேரளாவின் பங்கான 16 டிஎம்சி அடி நீரை மாதாந்திர அடிப்படையில் திறந்து விட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவு கடந்த ஆண்டு அரசிதழில் வெளியிடப்பட்டது. அடுத்தகட்டமாக, இந்த உத்தரவை அமல்படுத்த இரண்டு குழுக் களையும் நியமிப்பது அவசியமான நடவடிக்கையாகும்.
குழு அமைக்கும் விஷயத்தில் கர்நாடக அரசின் வாதத்தை ஏற்க முடியாது. இக்குழுக்களை அமைப்பதில் தாமதம் ஏற்படுத்துவது தமிழகத்தின் உரிமையை பறிப்பதற்கு சமம். தமிழகத்துக்கு தர வேண்டிய நீர் தவிர, எஞ்சியுள்ள மொத்த நீரையும் பயன்படுத்த கர்நாடகத்துக்கு உரிமை உண்டு என்ற வாதமும் தவறானது. காவிரி மேலாண் குழு பரிந்துரைப்படியே நீர் பங்கிடப்பட வேண்டும்.
மாண்டியா, மைசூர், சாம்ராஜ் நகர் மாவட்டங்களில், ரூ.400 கோடிக்கு பாசன திட்டங் களை நிறைவேற்ற கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக, 12.2.14-ஆம் தேதியிட்ட “தி ஹிந்து” பத்திரிகையின் பெங்களூர் பதிப்பு செய்தி வெளியிட்டுள்ளது.
கர்நாடக அரசின் இந்த நடவடிக்கை சட்ட விரோதமானது. எனவே, கர்நாடகத்தின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.