

புதுடெல்லி: இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் ராமநாதபுரம் எம்பியான கே. நவாஸ்கனி, மத்திய ரயில்வேதுறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவைச் சந்தித்து, ராமநாதபுரம் ரயில் வழித்தடங்களுக்கான கோரிக்கைகளை முன்வைத்து மனு அளித்தார்.
இது குறித்து ராமநாதபுரம் தொகுதி இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி எம்.பி.யான கே.நவாஸ்கனி தனது மனுவில் குறிப்பிட்டிருப்பதாவது: தமிழ்நாட்டின் தென் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் மானாமதுரையில் இருந்து அபிராமம் பார்த்திபனூர் கமுதி சாயல்குடி வழியாக தூத்துக்குடி வரை புதிய ரயில் பாதை அமைக்கப்பட வேண்டும்.
சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு இந்த புதிய ரயில் பாதை வழியாக ரயில்கள் இயக்கப்பட்டால் தென் மாவட்ட மக்கள் பெரிதும் பயனடைவார்கள். வணிக ரீதியாகவும் பயனுள்ளதாக அமையும். இந்த ரயில் பாதையை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காரைக்கால் பகுதியில் இருந்து தூத்துக்குடி வரை கிழக்கு கடற்கரை சாலை மார்க்கமாக திட்டமிடப்பட்ட ரயில்வே வழித்தட திட்டத்தை மீண்டும் செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை-ராமேஸ்வரம் இடையே இரு மார்க்கமும் திருச்சி, விருத்தாசலம் வழியாக பகல்நேர விரைவு வண்டி, தினசரி இன்டர்சிட்டி வகை ரயிலை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ராமேஸ்வரம்- மதுரை பயணிகள் ரயிலை மூன்று முறை இயக்க வேண்டும். ராமேஸ்வரம்- கன்னியாகுமரி (22621/22622) இரு மார்க்கமும் ரயில்களை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ராமேஸ்வரம்- கோயம்புத்தூர், மதுரை, பழனி, பொள்ளாச்சி வழியாக இரு மார்க்கமும், ராமேஸ்வரம் - பாலக்காடு பயணிகள் வண்டி இரு மார்க்கமும், ராமேஸ்வரம் - திருச்சி இரவு நேர பயணிகள் வண்டி இரு மார்க்கமும் இயக்கப்பட வேண்டும்.
மேலும், மக்களின் கோரிக்கையான சென்னை - ராமேஸ்வரம், ராமேஸ்வரம் - திருப்பதி அந்தியோதயா விரைவு வண்டிகளையும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவனந்தபுரம் - மதுரை புனலூர் - பாலக்காடு ஆகிய விரைவு வண்டிகளை ராமேஸ்வரம் வரை நீட்டிப்பு செய்ய வேண்டும். ராமேஸ்வரம் திருப்பதி (16779/16780) விரைவு வண்டி அதிகமாக பக்தர்கள் பயன்படுத்தக்கூடிய வழித்தடம். தற்போது வாரம் மூன்று முறை இயக்கப்பட்டு வரும் இந்த வண்டியை தினசரி வண்டியாக மாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வாரம் ஒருமுறை இயக்கப்படும் ராமேஸ்வரம் - ஓகா (16733/16734) வண்டி, வாரம் மூன்று முறையாக இயக்க வேண்டும்.
ராமநாதபுரம், பரமக்குடி, மண்டபம், மற்றும் விருதுநகர் மாவட்டம் நரிக்குடி மற்றும் திருச்சுழி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் அத்தடத்தின் ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை தேவை. ராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட தங்கச்சிமடம் ரயில் நிலையம் 1992 வரை செயல்பாட்டில் இருந்தது. கடந்த 20 ஆண்டுகளாக அந்த ரயில் நிலையம் செயல்படாமல் இருக்கிறது.
அந்த வழியாக செல்லும் ரயில்கள் தங்கச்சி மடத்தில் நிற்காமல் செல்வதால் அப்பகுதி மக்கள் பெரிதும் வருந்துகின்றனர். இங்கு 30 ஏக்கர் காலி இடமும் உள்ளதால், தங்கச்சி மடத்தில் ரயில்வே யார்ட் அமைக்கப் பரிசீலனை செய்ய வேண்டும். ராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட பாம்பன் பகுதியில் உள்ள புதிய ரயில்வே மேம்பாலத்திற்கு முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் பெயரை சூட்ட வேண்டும். இது, எங்களுடைய மாவட்ட மக்கள் கோரிக்கை.
பாம்பன் ரயில்வே மேம்பாலம் காண்போரை கவரும் வண்ணம் சிறப்பாக அமைந்துள்ளது, பழைய ரயில்வே மேம்பாலம் வரலாற்று சிறப்புமிக்கதாக விளங்கியது, எனவே இங்கு வந்து செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்காக ரயில்வே அருங்காட்சியகம் அமைக்க வேண்டும். சென்னையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு இயக்கப்படும் ரயில்களின் பழையப் பெட்டிகளை மாற்ற நெடு நாட்களாக கோரிக்கை வைக்கப்படுகிறது. இதன் மீதும் நடவடிக்கை தேவைப்படுகிறது.
செங்கோட்டை தாம்பரம் வாராந்திர 3 நாள் ரயில்களை தினசரியாக இயக்க வேண்டும் . திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி பட்டுக்கோட்டை அறந்தாங்கி காரைக்குடி வழியாக மதுரைக்கு தினசரி ரயில்கள் இயக்கப்பட வேண்டும் . காரைக்குடி - மயிலாடுதுறை சமீபத்தில் ரத்து செய்யப்பட்ட நேரடி ரயில் மீண்டும் இயக்கப்பட வேண்டும. காரைக்குடி அறந்தாங்கி பட்டுக்கோட்டை திருவாரூர் மயிலாடுதுறை வழியாக எழும்பூருக்கு தினசரி ரயில் இயக்க வேண்டும்.
சென்னையில் இருந்து காரைக்குடி வரை இயக்கப்படும் பல்லவன் விரைவு வண்டி அறந்தாங்கி வரை நீட்டிப்பு செய்ய வேண்டும் அல்லது காரைக்குடியிலிருந்து அறந்தாங்கி வரை இணைப்பு ரயில் இயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அறந்தாங்கி வழியாக திருவாரூர் மற்றும் காரைக்குடி ரயில் நிலையங்களை இணைக்கும் வண்ணம் கூடுதலாக ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அறந்தாங்கி பகுதியில் ரயில்வே சரக்கு யார்டு (Goods yard) அமைப்பது பராமரிப்பு பணிக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும். எனவே அறந்தாங்கி பகுதியில் ரயில்வே Goods yard அமைக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.