

தேசிய மருத்துவப் பதிவேடு வலைதளம் தொடங்கப்பட்டு மூன்றரை மாதங்கள் ஆன நிலையில் தற்போது 6,500-க்கும் குறைவான மருத்துவர்களே அதில் பதிவு செய்துள்ளனர்.
இந்தியாவில் மருத்துவப் பணியாற்ற தகுதியான அனைத்து எம்பிபிஎஸ் மருத்துவர்களையும் பதிவு செய்வதற்காக தேசிய மருத்துவ ஆணையத்தின் (என்எம்சி) தேசிய மருத்துவப் பதிவேடு (என்எம்ஆர்) போர்ட்டலை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா தொடங்கி வைத்தார். என்எம்ஆரின் தனித்தன்மை என்னவெனில் அது மருத்துவர்களின் ஆதார் ஐடியுடன் இணைக்கப்படும். இது மருத்துவரின் நம்பகத்தன்மையை உறுதி செய்யும் என்று சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தேசிய சுகாதார ஆணையம் மற்றும் என்எம்சி கூட்டு முயற்சியால் உருவான என்எம்ஆர் போர்ட்டல் மருத்துவர்களின் உண்மையான மற்றும் ஒருங்கிணைந்த தரவுகளை வெளிப்படைத் தன்மையுடன் உறுதி செய்கிறது.
இந்த நிலையில், இந்தியாவில் தற்போது 12 லட்சம் மருத்துவர்கள் உள்ள நிலையில் என்எம்ஆர் போர்ட்டலில் பதிவு செய்த மருத்துவர்களின் எண்ணிக்கை 6,500-க்கும் குறைவாகவே உள்ளது. அதிலும், பதிவு செய்தவர்களில் 284 மருத்துவர்களுக்கு மட்டுமே ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதே வேகத்தில் தேசிய மருத்துவ பதிவேடு வலைதளத்தில் பதிவுப் பணிகள் தொடரும்பட்சத்தில் 12 லட்சம் மருத்துவர்களை பதிவு செய்து முடிக்க 40 ஆண்டு வரை ஆகும் என்று கூறப்படுகிறது.
என்எம்ஆர் போர்ட்டலில், மருத்துவர்கள் தங்களது விவரங்களை விரைவான மற்றும் எளிதான முறையில் பதிவு செய்யலாம் என அரசு கூறியிருந்தாலும், உண்மையில் அதில் பல சிக்கல்களை சந்திப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
"மிகவும் ஒழுங்குபடுத்தப்பட்ட கல்வி முறை மூலம் படித்து வெளியில் வரும் 12 லட்சம் மருத்துவர்களை டிஜிட்டல் தரவுத் தளத்தில் அரசு இணைக்க முடியவில்லை என்றால் பிற வகை துறைகளுக்கான தரவுத் தளங்களை அவர்கள் எவ்வாறு உருவாக்க முடியும்" என்று அரசு கல்லூரியில் இருந்து ஓய்வு பெற்ற மூத்த மருத்துவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.