ராஜஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 5 வயது சிறுவன் உயிரிழப்பு

ராஜஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 5 வயது சிறுவன் உயிரிழப்பு
Updated on
1 min read

ராஜஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 5 வயது சிறுவன், 57 மணி நேர போராட்டத்துக்கு பிறகு மீட்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.

ராஜஸ்தானின் தவுசா மாவட்டம் காளிகாத் என்ற கிராமத்தில் ஆர்யன் என்ற 5 வயது சிறுவன் கடந்த திங்கட்கிழமை மாலை வயலில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது 150 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். தகவலின் பேரில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

ஆழ்துளை கிணற்றுக்கு அருகில் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் மீட்புக் குழுவினர் பள்ளம் தோண்டி வந்தனர். சிறுவனுக்கு குழாய் மூலம் ஆக்சிஜன் செலுத்தி வந்த அவர்கள் கேமரா மூலம் சிறுவனின் செயல்பாடுகளை கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில் 57 மணி நேர போராட்டத்துக்கு பிறகு சிறுவனை ஆழ்துளை கிணற்றில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு மீட்டனர். அப்போது மயக்க நிலையில் இருந்த சிறுவன் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். எனினும் சிகிச்சை பலனின்றி அங்கு பரிதாபமாக உயிரிழந்தான்.

இதுகுறித்து தவுசா மாவட்ட மருத்துவமனை அதிகாரி தீபக் சர்மா கூறுகையில், “மருத்துவக் குழு அமைத்து சிறுவனுக்கு ஆக்சிஜன் செலுத்தி வந்தோம். என்றாலும் பலத்த காயம், உணவு இல்லாதது, குழாயில் இருந்த சூழல் ஆகியவை சிறுவனின் உயிரிழப்புக்கு காரணமாகிவிட்டது. ஆழ்துளை கிணற்றுக்கு அருகில் மற்றொரு குழி தோண்டி சிறுவனை அடைவது அவ்வளவு எளிதல்ல. கைவிடப்பட்ட ஆழ்துளை கிணறுகளை உடனுக்குடன் மூடுவதன் மூலமே இதுபோன்ற சம்பவங்களை தடுக்க முடியும்" என்றார்.

சிறுவனை மீட்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்ட போதிலும் சிறுவன் உயிரிழந்தது வருத்தம் அளிக்கிறது என தவுசா மாவட்ட ஆட்சியர் தேவேந்திர குமார் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in