

ஃபீல்ட் மார்ஷல் கே.எம்.கரியப்பா, முன்னாள் ராணுவத் தளபதி கே.எஸ்.திம்மையா ஆகியோருக்கு எதிராக முகநூலில் கருத்து பதிவிட்ட வழக்கறிஞருக்கு ஜாமீன் வழங்கியதை கண்டித்து கர்நாடகாவில் உள்ள குடகில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.
கர்நாடக மாநிலம் குடகை சேர்ந்த வழக்கறிஞர் வித்யாதர். இவர் முகநூலில் ஸ்ரீவத்சா பட் என்ற போலிக் கணக்கை தொடங்கி குடவா சமூகம் மற்றும் ஃபீல்ட் மார்ஷல் கே.எம்.கரியப்பா, முன்னாள் ராணுவத் தளபதி கே.எஸ்.திம்மையா ஆகியோருக்கு எதிராகவும் கருத்துக்களை பதிவிட்டுள்ளார். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால், அவர் மீது மடிக்கேரி போலீஸார் கடந்த 22ம் தேதி வழக்குப்பதிவு செய்தனர்.
இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட வித்யாதருக்கு மடிகேரி மாவட்ட அமர்வு நீதிமன்றம் அன்றிரவே நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இதனை கண்டித்து குடவா மக்கள் கூட்டமைப்பினர் கடந்த 29ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதனை தொடர்ந்து குடகு மாவட்ட வழக்கறிஞர் சங்கம் வித்யாதரை 6 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்தது. இந்நிலையில் அவர் மீது குற்றவியல் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி குடவா மக்கள் கூட்டமைப்பினரும், முன்னாள் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு சங்கத்தினரும் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடத்தினர். இதனால் குடகு மாவட்டத்தில் மடிகேரி, வீராஜ்பேட்டை, சோமவார் பேட்டை உள்ளிட்ட இடங்களில் கடைகள், வணிக வளாகங்கள், உணவகங்கள் முழுவதுமாக அடைக்கப்பட்டன. குடகு மாவட்ட எல்லைகள் மூடப்பட்டு பேருந்து, லாரி, கார், ஆட்டோ இயக்கமும் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.
இந்த முழு அடைப்பு போராட்டத்தால் அங்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டன. இதனால் குடகு மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை நேற்று வெகுவாக பாதித்தது.