

பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்களுக்கு சொந்தமான 19 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
பாகிஸ்தானைச் சேர்ந்த, தடை செய்யப்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது (ஜெஇஎம்) தீவிரவாத அமைப்பு இந்தியாவில் தீவிரவாத தாக்குதலை நடத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக இங்குள்ள இளைஞர்களை தீவிரவாத செயலில் ஈடுபட ஊக்குவித்து வருவதுடன் தீவிரவாதத்தை பரப்பி வருவதாகவும் புகார் உள்ளது.
இது தொடர்பாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் அசாம், மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், டெல்லி மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய 5 மாநிலங்களுக்குட்பட்ட 26 இடங்களில் கடந்த அக்டோபர் மாதம் சோதனை நடத்தினர். இதில் ஷேக் சுல்தான் சலா உத்தின் அயுபி கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
அயுபியிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல் மற்றும் கைப்பற்றப்பட்ட சில ஆவணங்களின் அடிப்படையில், ஜம்மு காஷ்மீர், அசாம், மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம் மற்றும் குஜராத் ஆகிய 5 மாநிலங்களுக்குட்பட்ட 19 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். இதில், துண்டு பிரசுரங்கள் மற்றும் பத்திரிகைகள், மின்னணு சாதனங்கள் உள்ளிட்டவற்றை என்ஐஏ அதிகாரிகள் கைப்பற்றி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் மகாராஷ்டிராவில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று நடத்திய சோதனையின்போது, 2 பேர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து என்ஐஏ வெளியிட்ட அறிக்கையில், “ஜேஇஎம் அமைப்பு இந்தியாவில் தீவிரவாதத்தை பரப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. மேலும் இந்தியாவில் தீவிரவாத தாக்குதல்களை நடத்துவதற்காக இளைஞர்களை சேர்க்கும் பணியில் சிலர் ஈடுபட்டுள்ளனர். அந்த அமைப்புடன் தொடர்பு வைத்திருந்தவர்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்படுகிறது” என கூறப்பட்டிருந்தது.