

மகாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான அமைச்சரவை நாளை (டிச. 14) விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக துணை முதல்வர் அஜித் பவார் கூறினார்.
மகாராஷ்டிராவில் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 288 இடங்களில் மகாயுதி கூட்டணி 235 இடங்களை கைப்பற்றியது. இதையடுத்து மகாராஷ்டிர முதல்வராக பாஜக மூத்த தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் கடந்த 5-ம் தேதி மூன்றாவது முறையாக பதவியேற்றார். துணை முதல்வர்களாக சிவசேனா கட்சியை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டேவும் தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) தலைவர் அஜித் பவாரும் பதவியேற்றனர். மும்பை ஆசாத் மைதானத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் இவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்நிலையில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், துணை முதல்வர் அஜித் பவார் ஆகியோர் நேற்று டெல்லியில் மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினர். பின்னர் செய்தியாளர்களிடம் அஜித் பவார் கூறுகையில், “மகாராஷ்டிராவில் சனிக்கிழமை (நாளை) அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது" என்றார்.
முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், “எங்கள் கட்சியில் ஆட்சிமன்ற குழு மற்றும் மூத்த தலைவர்களால் முடிவு எடுக்கப்படுகிறது. பாஜகவுக்கான அமைச்சர் பதவிகளில் யாரை நியமிப்பது என்பது குறித்து நாங்கள் முடிவு எடுப்போம். இதுபோல் சிவசேனா மற்றும் என்சிபி.க்கான அமைச்சர் பதவிகளில் யாரை நியமிப்பது என்பது குறித்து அவர்கள் முடிவு செய்வார்கள். அமைச்சரவை விரிவாக்கத்தில் 3 கட்சிகளுக்கான பதவிகள் குறித்து ஏற்கெனவே முடிவு எடுக்கப்பட்டு விட்டது. விரைவில் அது உங்களுக்கு தெரியவரும்" என்றார்.
முன்னதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறுகையில், “அமைச்சரவை விரிவாக்கத்தில் பாஜக 20 இடங்களை எதிர்பார்க்கிறது. சிவசேனாவும் என்சிபியும் தலா 10 இடங்களை எதிர்பார்க்கின்றன. ஆளும் மகாயுதி கூட்டணியில் அதிக எம்எல்ஏக்கள் இருப்பதை கவனத்தில் கொண்டு அமைச்சர் பதவிகளை செயல்திறன் அடிப்படையில் இரண்டரை ஆண்டுகளுக்கு மட்டும் வழங்கவும் வாய்ப்புள்ளது" என்றார்.