

பெங்களூரு: அம்பேத்கரிய இயக்க முன்னோடியும் சமூக செயற்பாட்டாளருமான ஜெய்பீம் சிவராஜ் (75) உடல் நலக்குறைவால் கர்நாடகாவில் உள்ள கோலார் தங்கவயலில் காலமானார்.
கர்நாடக மாநிலம் கோலார் தங்கவயலை சேர்ந்த ஜெய்பீம் சிவராஜ் (75) சிறுவயது முதலே டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் சமூக செயல்பாடுகளில் ஈடுபாடு கொண்டிருந்தார். இவர் பிறந்ததும் அவரது தந்தை மாசிலாமணி இவருக்கு மணி என பெயர் சூட்டினார். 1954ல் அம்பேத்கர் கோலார் தங்கவயலுக்கு வந்தபோது, மாசிலாமணி தன் மகனை அழைத்துச்சென்று பள்ளியில் சேர்ப்பதற்காக புதிய பெயரை சூட்டுமாறு கேட்டுக்கொண்டார். அதனால் அம்பேத்கர் இவருக்கு சென்னையின் முன்னாள் மேயர் பேராசிரியர் என்.சிவராஜின் நினைவாக 'சிவராஜ்' என பெயர் சூட்டினார்.
பேராசிரியர் என்.சிவராஜின் வழிகாட்டுதலின்படி இவர் முதுகலை பொருளாதாரமும், சட்டமும் படித்து முடித்தார். பின்னர் கர்நாடக அரசின் புள்ளியியல் துறையில் 26 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றார். திருமணம் செய்து கொள்ளாமல் அம்பேத்கரின் சமூக செயல்பாடுகளை தீவிரமாக முன்னெடுத்து வந்தார். இதனால் டாக்டர் அம்பேத்கர், என்.சிவராஜ், அன்னை மீனாம்பாள், ஆரிய சங்காரன், பள்ளிக்கொண்டா கிருஷ்ணசாமி,ஜே.சி.ஆதிமூலம்,பி.எம்.சுவாமி துரை, சி.எம்.ஆறுமுகம் உள்ளிட்டோருடன் பழகும் வாய்ப்பை பெற்றார்.
ஜெய்பீம் சிவராஜ் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் டாக்டர் அம்பேத்கர் மக்கள் நல பேரவை என்ற அமைப்பை உருவாக்கி அதன் மூலம் சமூக செயற்பாடுகளில் கவனம் செலுத்தினார். ஏழை குழந்தைகளின் கல்விக்கு உதவி செய்ததுடன், அவர்கள் அரசு வேலைக்கு செல்வதற்கான உதவிகளையும் செய்துவந்தார். கோலார் தங்கவயல் சுரங்க தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம், தொழிற்சங்க போராட்டங்கள், வீட்டு மனை, இலவச சட்ட ஆலோசனை, முதியோர் ஓய்வூதியம், அரசின் இலவச காப்பீடு, குடும்ப அட்டை விண்ணப்பித்தல் போன்றவற்றை அன்றாடம் செய்துவந்தார்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக உடல் நலம் குன்றியிருந்த ஜெய்பீம் சிவராஜ் காலமானார். அவரது மறைவுக்கு இந்திய குடியரசுக் கட்சியின் தலைவர் எஸ்.ராஜேந்திரன், தென்னிந்திய சாக்கிய பவுத்த சங்க செயலாளர் துரை ராஜேந்திரன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர். கோலார் தங்கவயலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட ஜெய்பீம் சிவராஜின் உடலுக்கு அம்பேத்கரிய அமைப்பினரும் தமிழ் அமைப்பினரும் நூற்றுக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர்.