Last Updated : 01 Jul, 2018 10:00 AM

 

Published : 01 Jul 2018 10:00 AM
Last Updated : 01 Jul 2018 10:00 AM

டெல்லியில் நாளை காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம்: உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய கர்நாடகா முடிவு-நதிநீர் பங்கீட்டு விவகாரத்தில் திருப்பம்; நாளை நடக்கும் ஆணைய கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவிக்கவும் திட்டம்

புதுடெல்லி / பெங்களூரு

கர்நாடகா, தமிழகம் இடையேயான நதிநீர் பங்கீட்டை தீர்மானிக்கும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் நாளை டெல்லியில் நடைபெறுகிறது. இந்நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

கர்நாடகா, தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களுக்கு இடையேயான காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 15-ம் தேதி தீர்ப்பளித்தது. அதில், மத்திய அரசு காவிரி நதிநீர் பங்கீட்டை தீர்க்க செயல்திட்டத்தை (ஸ்கீம்) உருவாக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதையடுத்து மத்திய அரசு கடந்த ஜூன் 1-ம் தேதி காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நீர் ஒழுங்காற்று குழு அமைப்பதை அரசிதழில் வெளியிட்ட‌து.

இதையடுத்து கடந்த 22-ம் தேதி மத்திய நீர்வளத்துறை ஆணையத்தின் தலைவர் மசூத் ஹூசைன் காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவராகவும் மத்திய நீர்வளத்துறையின் தலைமை பொறியாளர் ஏ.எஸ்.கோயல் செயலாளராகவும் நிய மிக்கப்பட்டன‌ர்.

டெல்லியை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இந்த ஆணையத்தில் மத்திய நீர்வளத்துறை ஆணையத்தின் தலைமை பொறியாளர் நவீன் குமார்,மத்திய வேளாண் ஆணையத்தின் ஆணையர் ஆகியோர் நிரந்தர‌ உறுப்பினராகவும், மத்திய பொதுப்பணித்துறையின் இணைசெயலர், மத்திய வேளாண் நலத்துறை இணை செயலர் பகுதி நேர உறுப்பினராகவும் அறிவிக்கப்பட்டனர். கர்நாடகா, தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநில நீர்ப்பாசனத்துறை செயலர்களும் இதில் இடம்பெறுவார்கள் என மத்திய அரசு அரசாணை வெளியிட்டது.

முதல் கூட்டம்

இந்நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் நாளை டெல்லியில் நடைபெறுகிறது. இந்த ஆணையத்தின் தலைவர் மசூத் ஹூசேன் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் செயலர் ஏ.எஸ்.கோயல், மத்திய நீர்வளத்துறை ஆணையத்தின் தலைமை பொறியாளர் நவீன் குமார், மத்திய வேளாண் ஆணையத்தின் ஆணையர், மத்திய பொதுப்பணித்துறையின் இணை செயலர், மத்திய வேளாண் நலத்துறை இணை செயலர் ஆகியோர் மத்திய அரசின் சார்பில் பங்கேற்கின்றனர்.

கர்நாடகா சார்பில் அம்மாநில நீர்வளத்துறை செயலர் ராகேஷ் சிங், தமிழகம் சார்பில் பொதுப்பணித்துறை முதன்மை செயலர் எஸ்.கே.பிரபாகர், கேரளா சார்பில் அம்மாநில நீர்வளத்துறை செயலர் டிங்கு பிஸ்வால், புதுச்சேரி சார்பில் பொதுப்பணித்துறை ஆணையர் அன்பரசு ஆகியோர் பங்கேற்கின்றனர். நீண்ட போராட்டத்துக்கு பிறகு உருவாக்கப்பட்டுள்ள காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் என்பதால் பெரிய அளவில் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கூட்டத்தில் ஆணையம் செயல்படும் விதம், அணை பராமரிப்பு, நீர் இருப்பு கணக்கீடு, ஆய்வு மேற்கொள்ளும் முறை, காவிரி நீர்ப்பாசன பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய விவசாய முறை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படும். குறிப்பாக கர்நாடகா, தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களுக்கு இடையே நதி நீர் பங்கீடு எவ்வாறு மேற்கொள்வது, எவ்வாறு மாதாந்திர நீர் பங்கீடு மேற்கொள்வது என்பன போன்ற முக்கிய முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.

அனைத்துக் கட்சி கூட்டம்

இந்நிலையில் காவிரி மேலாண்மை ஆணையம் குறித்து விவாதிப்பதற்காக பெங்களூருவில் நேற்று கர்நாடக முதல்வர் குமாரசாமி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் துணை முதல்வர் பரமேஷ்வர், நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவகுமார், எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா, மத்திய அமைச்சர்கள் சதானந்த கவுடா, அனந்த்குமார், காவிரி நீர்ப்பாசன கழக அதிகாரிகள், சட்ட நிபுணர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சுமார் 2 மணி நேரம் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நீர் ஒழுங்காற்று குழு ஆகியவற்றை மத்திய அரசு அமைத்ததற்கு அனைத்து கட்சி தலைவர்களும் ஆட்சேபம் தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் அனைவரும் ஒன்றிணைந்து செயல் படுவது என முடிவெடுத்து, சட்ட ரீதியான போராட்டம் நடத்த ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றினர்.

சட்ட போராட்டம் தொடரும்

இதுகுறித்து நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவகுமார் கூறும்போது, "காவிரி மேலாண்மை ஆணையம் விவகாரத்தில் அவசரமாக செயல்படக் கூடாது என கர்நாடகா சார்பில் மத்திய அரசை வலியுறுத்தினோம். ஆனால் எங்களது எதிர்ப்பையும் மீறி, மத்திய அரசு காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நீர் ஒழுங்காற்று குழு அமைத்தது கர்நாடக விவசாயிகளுக்கு எதிரானது.

இந்த இரு அமைப்புகளையும் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்திய பிறகே உருவாக்கி இருக்க வேண்டும். அதேபோல காவிரி மேலாண்மை ஆணையத்தின் சில விதிமுறைகளை மாற்றக் கோரினோம். அதனையும் மத்திய அரசு ஏற்கவில்லை. எனவே காவிரி மேலாண்மை ஆணையத்தை எதிர்த்து நாடாளுமன்றத்தில் அனைத்து கட்சியினரும் இணைந்து செயல்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ள‌து.

கர்நாடக அரசின் சட்ட ஆலோசகர் ஃபாலி எஸ்.நாரிமனின் அறிவுரையின்படி காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு எதிராக சட்ட போராட்டம் நடத்த முடிவெடுத்துள்ளோம். அரசியல் சாசன அமர்வில் மூல வழக்கை மீண்டும் விசாரிக்குமாறு மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளோம்.

காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு எதிராக நாடாளுமன்றத்திலும், நீதிமன்றத்தில் கர்நாடகா தொடர்ந்து போராடும். அதே போல டெல்லியில் திங்கள்கிழமை நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் கர்நாடக பிரதிநிதி பங்கேற்று, எங்களது எதிர்ப்பை தெரிவிப்பார்'' என்று அமைச்சர் டி.கே. சிவக்குமார் கூறினார்.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் நடைபெறவிருக்கும் நிலையில், கர்நாடகாவின் இந்த அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அனைத்துக் கட்சி கூட்டத்தை புறக்கணித்தார் சித்தராமையா

காவிரி விவகாரம் தொடர்பாக பெங்களூருவில் நேற்று நடந்த கர்நாடக அனைத்துக்கட்சி கூட்டத்தை முன்னாள் முதல்வர் சித்தராமையா புறக்கணித்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் முதல்வர் எச்.டி. குமாரசாமி தலைமையில் கடந்த மே 23-ம் தேதி முதல் மஜத - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடை பெற்று வருகிறது. அதிகார பகிர்வு, அமைச்சரவை இலாகா பங்கீடு உள்ளிட்ட விவகாரங்களில் இரு கட்சிகளுக்கிடையே முரண்பாடு ஏற்பட்டது. இதனால் முதல்வர் குமாரசாமிக்கும், முன்னாள் முதல்வர் சித்தராமை யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதனிடையே சித்தராமையா மஜத - காங்கிரஸ் கூட்டணி அரசின் ஒருங்கிணைப்பு குழு தலைவராக நியமிக்கப் பட்டார்.

இதைத் தொடர்ந்து முதல்வர் குமாரசாமி புதியதாக பட்ஜெட் தாக் கல் செய்வதற்கு சித்தராமையா பகிரங்

கமாக எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் இந்த ஆட்சி மக்களவை தேர்தல் வரை மட்டுமே நீடிக்கும் என சித்த ராமையா தெரிவித்த கருத்தால் இருகட்சிகளுக்கிடையே மோதல் உரு வானது.

இந்நிலையில் சித்தராமையா ஆதரவு எம்எல்ஏக்களும், அமைச்சர்களும் அவரை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்ற‌னர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவரும், துணை முதல்வருமான ஜி. பரமேஷ்வர், ‘‘இந்த ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்கும்''என்றார். இதனிடையே அதிருப்தியில் உள்ள காங்கிரஸ் எம்எல்ஏக்களை இழுக்க பாஜக மேலிடம் முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

குமாரசாமி - சித்தராமையா இடையேயான மோதலால் கர்நாடக அரசுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானதை தொடர்ந்து காங்கிரஸ் மேலிடம் சித்தராமையாவை கண்டித்தது. இதையடுத்து கடந்த இரு தினங்களாக ஊடகங்களுக்கு பேட்டி அளிப்பதை தவிர்த்து வந்தார்.

இதனால் குமாரசாமி - சித்தராமையா மோதல் முடிவுக்கு வந்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில் நேற்று பெங்களூருவில் முதல்வர் குமாரசாமி தலைமையில் காவிரி விவகாரம் குறித்து விவாதிக்க அனைத்துக்கட்சி கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் எதிர்க்கட்சி தலைவர் பி.எஸ்.எடியூரப்பா,மத்திய அமைச்சர்கள் சதானந்தகவுடா, அனந்தகுமார் உள் ளிட்டோரும், காங்கிரஸ், பாஜக, மஜத உள்ளிட்ட அனைத்துக்கட்சி தலை

வர்களும் பங்கேற்றனர். ஆனால் முன்னாள் முதல்வரும், கூட்டணி கட்சியின் முக்கிய தலைவருமான சித்தராமையா கலந்து கொள்ளவில்லை.

அவருக்கு துணை முதல்வருக்கானஇடம் ஒதுக்கப்பட்டிருந்தது. சித்தராமையாவின் புறக்கணிப்பால் மஜத - காங்கிரஸ் இடையே மோதல் நீடிப்பது உறுதியாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x