எவ்வளவு காலத்துக்கு இலவசங்களை வழங்குவீர்கள்? - மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

எவ்வளவு காலத்துக்கு இலவசங்களை வழங்குவீர்கள்? - மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி
Updated on
2 min read

வேலை வாய்ப்புகளை உருவாக்​காமல், எவ்வளவு காலத்​துக்கு இலவசங்களை வழங்​கு​வீர்கள் என்று மத்திய அரசிடம் உச்ச நீதி​மன்றம் கேள்​வியெழுப்பி உள்ளது.

கரோனா காலத்​தில் புலம்​பெயர் தொழிலா​ளர்​களுக்கு இலவச ரேஷன் வழங்க மாநில மற்றும் யூனியன் பிரதேசங்​களுக்கு உச்ச நீதி​மன்றம் உத்தர​விட்​டது. இதுதொடர்பாக போர்ட்டலை உருவாக்கி அதில் அனைத்து புலம்​பெயர் தொழிலா​ளர்​களை​யும் பதிவு செய்து ரேஷன் கார்டு வழங்கி உணவுப் பொருள்களை விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்​டும் என உச்ச நீதி​மன்றம் அறிவுறுத்​தி​யது. இதையடுத்து, மத்திய அரசு இ-ஷ்ரம் போர்ட்டலை தொடங்​கியது.

இது தொடர்பான வழக்கை உச்ச நீதி​மன்றம் தாமாக முன்​வந்து விசாரணை மேற்​கொண்​டுள்​ளது. கடந்த செப்​டம்பர் 2-ம் தேதி நடைபெற்ற விசா​ரணை​யின்​போது 2021-ல் அளிக்​கப்​பட்ட தீர்ப்​பின்படி புலம்​பெயர் தொழிலா​ளர்​களுக்கு உதவ எடுக்​கப்​பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்​யு​மாறு மத்திய அரசுக்கு உச்ச நீதி​மன்றம் உத்தர​விட்​டது.

இந்த நிலை​யில், உச்ச நீதி​மன்ற நீதிப​திகள் சூர்​ய​காந்த், மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று முன்தினம் விசாரணை நடைபெற்​றது. அப்போது, மத்திய அரசு சார்​பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, புலம்​பெயர் தொழிலா​ளர்கள் பிரச்​சினைகள் தொடர்பான அரசு சாரா அமைப்​பின் சார்​பில் மூத்த வழக்​கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆகியோர் ஆஜராகினர்.

பிரசாந்த் பூஷண் வாதிடு​கை​யில், ‘‘புலம் பெயர் தொழிலா​ளர்​களுக்கு இலவச ரேஷனை பெறு​வதற்கு ரேஷன் கார்​டுகளை வழங்​கு​மாறு உச்ச நீதி​மன்றம் உத்தர​விட்​டுள்​ளது. எனவே, இ-ஷ்ரம் போர்ட்​டலில் பதிவு செய்த அனைத்து புலம்​பெயர் தொழிலா​ளர்​களுக்​கும் இலவச ரேஷன் கார்​டுகளை வழங்​கு​வதற்கான வழிகாட்டுதலை வழங்க வேண்​டும்” என்றார். அதைத்​தொடர்ந்து, தேசிய உணவு பாது​காப்புச் சட்டம் 2013-ன் கீழ் நாட்​டில் 81 கோடி பேருக்கு இலவச ரேஷன் வழங்​கப்​படு​வதாக மத்திய அரசின் சார்​பில் தெரிவிக்​கப்​பட்​டது.

இதைக் கேட்டு வியப்​படைந்த நீதிப​திகள் அமர்வு கூறிய​தாவது: வரி செலுத்​துபவர்கள் மட்டும் மத்திய அரசின் இலவச ரேஷன் பட்டியலில் இடம்​பெற​வில்லை. இன்னும் எவ்வளவு காலத்​துக்கு இதுபோன்ற இலவசங் களை வழங்க முடி​யும். புலம்​பெயர் தொழிலா​ளர்​களுக்கு வேலை​வாய்ப்பு மற்றும் திறன் மேம்​பாடு ஆகிய​வற்றை உருவாக்குவது குறித்து ஏன் சிந்​திக்க கூடாது. புலம்​பெயர் தொழிலா​ளர்கள் அனைவருக்​கும் ரேஷன் கார்டு வழங்க கூறினால் அது பல மாநிலங்​களில் நிதி நெருக்​கடியை உருவாக்​கும். இவ்​வாறு நீதிப​தி​கள் அமர்வு தெரி​வித்​தது.

சொலிசிட்டர் ஜெனரல்- பிரசாந்த் பூஷண் மோதல்: மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறும்போது, ‘‘வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் பொதுநல மனுக்கள் மூலம் மறைமுகமாக ஆட்சி, நிர்வாகத்தை நடத்த முயற்சி செய்கிறார். தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் பொதுநல மனுக்கள் மூலம் நாட்டை ஆள முயற்சி செய்யக்கூடாது. பிரசாந்த் பூஷண் குளிரூட்டப்பட்ட அறையில் அமர்ந்து கொண்டு பொது நல மனுக்களை தயாரிக்கிறார்’’ என்றார். இதற்கு பிரசாந்த் பூஷண், “தனிப்பட்ட பகைமை காரணமாக ஒவ்வொரு வழக்கிலும் என்னை குறித்து துஷார் மேத்தா எதிர்மறையாக பேசுகிறார்" என்று குற்றம் சாட்டினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in