Published : 11 Dec 2024 01:35 AM
Last Updated : 11 Dec 2024 01:35 AM
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 3 ஆயிரத்து 364 மகப்பேறு மரணங்கள் ஏற்பட்டுள்ளன. நிகழாண்டில் நவம்பர் மாதம் வரை மட்டும் 327 மகப்பேறு மரணங்கள் பதிவாகியுள்ளன. கடந்த 40 நாட்களில் பெல்லாரியில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனை, மாவட்ட பொது மருத்துவமனையில் மட்டும் 6 பெண்கள் உயிரிழந்தனர்.
இதற்கு கர்ப்பிணி நோயாளிகளுக்கு நரம்புகளில் தரமற்ற மருந்து செலுத்தப்பட்டதால் மாரடைப்பு, சிறுநீரக கோளாறு ஏற்பட்டதாக தகவல் வெளியாகி யுள்ளன. எனவே இதுகுறித்து விசாரணை நடத்தக் கோரி கர்நாடக பாஜக சார்பில் சட்டமேலவை எதிர்க்கட்சி தலைவர் சலவடி நாராயணசாமி, லோக் ஆயுக்தா நீதிபதி பி.எஸ்.பாட்டீலிடம் புகார் அளித்தார்.
கர்நாடக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் ஆர்.அசோகா இந்த விவகாரம் குறித்து ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தினார். பாஜக, மஜத ஆகிய எதிர்க்கட்சியினர் சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
இந்நிலையில் முதல்வர் சித்தராமையா விடுத்துள்ள அறிக்கையில், “மகப்பேறு மரணங்கள் குறித்து விசாரிக்க திறன் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குநர் கனக வல்லி தலைமையில் 4 பேர் கொண்ட உயர் மட்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் அறிக்கையை 3 மாதங்களுக்குள் அரசிடம் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கர்ப்பிணி பெண்களுக்கு நரம்புகளில் செலுத்தப்படும் மருந்தை விநியோகம் செய்த மேற்கு வங்க மருந்து நிறுவனத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பெல்லாரி மாவட்டத்தில் உயிரிழந்த 6 பெண்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும்”என குறிப்பிடப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT