பெரம்பூர் - வில்லிவாக்கம் இடையே 4-வது ரயில் முனையத்துக்கு ரயில்வே அமைச்சரிடம் திமுக எம்.பி கோரிக்கை

பெரம்பூர் - வில்லிவாக்கம் இடையே 4-வது ரயில் முனையத்துக்கு ரயில்வே அமைச்சரிடம் திமுக எம்.பி கோரிக்கை
Updated on
1 min read

புதுடெல்லி: பெரம்பூர் – வில்லிவாக்கம் இடையே சென்னையின் 4 ஆவது முனையம் அமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான கோரிக்கை மனுவை இன்று மத்திய ரயில்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் திமுக எம்பி இரா.கிரிராஜன் டெல்லியில் அளித்தார்.

இது குறித்து மாநிலங்களவை எம்பியான கிரிராஜன் மத்திய அமைச்சர் அஸ்வினிக்கு அளித்த மனுவின் விவரம் பின்வருமாறு: “சென்னை மாநகரத்தில் பெருகி வரும் மக்கள் தொகை காரணமாக ரயில் போக்குவரத்து அனைத்து தரப்பு மக்களுக்கும் அவசியமாக உள்ளது. நாட்டின் பல பகுதிகளில் இருந்து தினந்தோறும் ஆயிக்கணக்கான மக்கள் மருத்துவ தேவை, வியாபாரம், கல்வி, வணிகம், கோவில் தரிசனம், சுற்றுலா ஆகிய தேவைகளுக்காக வருகிறார்கள். இதனால் அதிக வழி தடங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளிருந்து ரயில்கள் இயக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

தற்போது சென்னையில் சென்னை சென்டரல், எழும்பூர் ஆகிய ரயில் முனையங்கள் போதுமானதாக இல்லை. தாம்பரம் ரயில் முனையம் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டாலும் அது சென்னை புறநகர் பகுதியில் அமைந்துள்ளது. இதனால் சென்னையின் மையப்பகுதியில் புதிய நான்காவது ரயில் முனையம் அமைக்க வேண்டிய அவசியம் உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதியிலுள்ள லட்சக்கணக்கான பொது மக்கள் ரயில் பயணத்தை எளிதாக்க வேண்டி உள்ளது.

இதற்கு வசதியாக நான்காவது முனையத்திற்கு தேவை உள்ளது. இதை அமைக்க ஏதுவாக பெரம்பூர், வில்லிவாக்கம் இடையே காலியாக உள்ள நூற்று கணக்கான ஏக்கர் பரப்பளவு கொண்ட ரயில்வே துறைக்கு சொந்தமான இடம் உள்ளது. இதை பயன்படுத்தி பெரம்பூர் – வில்லிவாக்கம் இடையே சென்னையின் நான்காவது இரயில் முனையம் அமைத்திட வேண்டும். இதற்கான நிதியை வரும் 2025-ம் ஆண்டுக்கான நிதி-நிலை அறிக்கையில் ஒதுக்கிடு செய்திட வேண்டும்” என அந்த கோரிக்கை மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in