மக்களவை திங்கள்கிழமை வரை ஒத்திவைப்பு

மக்களவை திங்கள்கிழமை வரை ஒத்திவைப்பு
Updated on
1 min read

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் எம்.பி.க்கள் எழுப்பிய பரஸ்பர குற்றச்சாட்டுகளால் அலுவல் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. இதையடுத்து, மக்களவை திங்கள்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கியது முதலே அதானி விவகாரத்தை விவாதிக்க கோரி காங்கிரஸ் கட்சி தொடர்ச்சியாக அமளியில் ஈடுபட்டு வருகிறது. இதனால், நாடாளுமன்றம் செயல்படுவதில் முட்டுக்கட்டை நீட்டித்து வருகிறது.

ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, கே.சி.வேணுகோபால், கவுரவ் கோகாய் உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் நேற்று அவை தொடங்குவதற்கு முன்பாகவே தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், மோடியும் அதானியும் ஒருவர்தான் என்ற வாசகம் எழுதப்பட்ட கருப்பு நிற முகக் கவசத்தை அணிந்து வந்தனர். நேராக அம்பேத்கர் சிலைக்கு அருகே சென்ற அவர்கள் பின்னர் மக்களவைக்குள் நுழைந்தனர்.

காங்கிரஸ் எம்.பி. வேணுகோபால் பேச எழுந்தபோது, சபாநாயகர் ஓம் பிர்லா " இது கேள்வி நேரம். நீங்கள் சபையை நடத்த விரும்பவில்லையா? சபை மரபுகளின் படி நடத்தப்படும். அதன் கண்ணியத்தை குறைக்க விடமாட்டேன்" என்றார்.

ராகுல் காந்திக்கு எதிராக பாஜக எம்.பி. சம்பித் பத்ரா கருத்து தெரிவித்ததற்காக அவருக்கு எதிராக சிறப்புரிமை தீர்மானம் கொண்டு வர நோட்டீஸ் சமர்ப்பித்த நிலையில், பாஜக எம்.பி. நிஷி காந்த் துபேயை பேச அனுமதித்தற்காக காங்கிரஸ் எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து, நடைபெற்ற கூச்சல் குழப்பங்களால் மக்களவை திங்கள்கிழமை வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in