

புதுடெல்லி: வங்கதேசத்தில் இஸ்கான் மதகுரு சின்மயி கிருஷ்ண தாஸ் கைது செய்யப்பட்டுள்ளது மதத்தின் மீதான அவமதிப்பு நடவடிக்கை என்று நடிகையும், மதுரா தொகுதி பாஜக எம்.பி. யுமான ஹேமா மாலினி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நாடாளுமன்றத்தில் கூறியதாவது: தேசதுரோக வழக்கில் வங்கதேச அரசு இஸ்கான் மதகுருவை கைது செய்துள்ளது மதத்தின் மீதான அவமதிப்பு. இதுபோன்ற, அநீதியை பொறுத்துக்கொள்ள முடியாது. இது, ராஜதந்திர ரீதியிலான பிரச்சினை அல்ல. நமது உணர்ச்சி மற்றும் ஸ்ரீ கிருஷ்ணரின் பக்தி தொடர்புடையது. இஸ்கான் அமைப்பு உலகளவில் அறியப்பட்டவை என்பதால் அது தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுவது கண்டிக்கத்தக்கது.
கோடிக்கணக்கான கிருஷ்ண பக்தர்களை வங்கதேசத்தின் இந்த செயல் புண்படுத்தியுள்ளது. எனவே, அவர் மீதான தேச துரோக வழக்கை திரும்பப் பெற வேண்டும். எனது தொகுதியில் ஏராளமான துறவிகளும், கிருஷ்ண பக்தர்களும் இப்பிரச்சினை குறித்து கவலை தெரிவித்ததால் இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இவ்வாறு ஹேமா மாலினி தெரிவித்தார்.
இதனிடையே, உஜ்ஜைனி பாஜக எம்.பி. அனில் ஃபிரோரியாக நாடாளுமன்ற பூஜ்ய நேரத்தின் போது பேசுகையில், “ வங்கதேச அரசு இஸ்கான் மதகுருவை கைது செய்து சிறையில் அடைத்திருக்கும் நிலையில், அவரை விடுவிப்பது தொடர்பாக பிரதமர் மோடி தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.