

புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவை சபாநாயகரும் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ராம் நிவாஸ் கோயல் (76) தேர்தல் அரசியலை விட்டு விலகியுள்ளார்.
கிழக்கு டெல்லி, ஷதாரா தொகுதியின் இரண்டாவது முறை எம்எல்ஏவுமான ராம் நிவாஸ் கோயல், கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “வயது காரணமாக தேர்தல் அரசியலில் இருந்து விலக விரும்புகிறேன். ஆம் ஆத்மி கட்சியில் தொடர்ந்து பணியாற்றுவேன். நீங்கள் வழங்கும் எந்தப் பொறுப்பையும் நிறைவேற்ற முயற்சிப்பேன்” என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து அர்விந்த் கேஜ்ரிவால் கூறுகையில், “கோயலின் முடிவை மதிக்கிறோம். அவரது வழிகாட்டுதல் பல ஆண்டுகளாக கட்சியை சரியான திசையில் கொண்டு சென்றது. ஆம் ஆத்மி குடும்பத்தின் பாதுகாவலராக அவர் தொடர்ந்து நீடிப்பார்" என்று தெரிவித்துள்ளார்.
மொத்தம் 70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு 2025 பிப்ரவரியில் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.