

மும்பை: பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில், மகாராஷ்டிர முதல்வராக தேவேந்திர ஃபட்னாவிஸ் பதவியேற்றார். ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் ஆகியோர் துணை முதல்வர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.
பதவியேற்பு விழா தெற்கு மும்பையில் உள்ள ஆசாத் மைதானத்தில் வியாழக்கிழமை மாலை 5.30 மணி அளவில் நடைபெற்றது. விழா மேடைக்கு பிரதமர் மோடி வந்ததும், தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இதையடுத்து, தேவேந்திர ஃபட்னாவிஸ் முதல்வராக பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். பின்னர், முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸுக்கு பூங்கொத்துக் கொடுத்து ஆளுநர் வாழ்த்து தெரிவித்தார். இதையடுத்து, தேவேந்திர ஃபட்னாவிஸுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
தேவேந்திர ஃபட்னாவிஸை தொடர்ந்து சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே துணை முதல்வராக பதவியேற்றார். அவரைத் தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றார். இருவருக்கும் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் பூங்கொத்துக்கள் கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர், இருவரும் பிரதமர் மோடி உள்ளிட்டோரிடம் வாழ்த்து பெற்றனர்.
பதவியேற்பு விழாவில், மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, சிவராஜ் சிங் சவுஹான், நிர்மலா சீதாராமன், மாநில முதல்வர்கள் நிதிஷ் குமார், சந்திரபாபு நாயுடு, யோகி ஆதித்யா நாத், பூபேந்திர படேல், புஷ்கர் சிங் தாமி, மோகன் சரண் மாஞ்சி, பிரமோத் சாவந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்தப் பதவியேற்பு விழாவில் பாலிவுட் திரை பிரபலங்களான ஷாருக்கான், சல்மான் கான், ரன்பிர் கபூர், ரன்வீர் சிங், தொழிலதிபர் முகேஷ் அம்பானி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பதவியேற்பு விழாவையொட்டி 4,000க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
யார் இந்த தேவேந்திர ஃபட்னாவிஸ்? - மகாராஷ்டிர முதல்வராக 3-வது முறையாக பதவியேற்றுள்ள தேவேந்திர ஃபட்னாவிஸ் பின்னணி குறித்து சுருக்கமாக பார்ப்போம்.
வழக்கறிஞராகவும் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினராகவும் பயிற்சி பெற்ற தேவேந்திர ஃபட்னாவிஸ் மகாராஷ்டிராவில் தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். தனது புத்திசாலித்தனம் மற்றும் கூர்மையான விவாத திறன்களுக்காக நற்பெயர் பெற்றார். நாக்பூர் தென்மேற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் தொடர்ச்சியாக 6 முறை வெற்றி பெற்றுள்ளார்.
தேவேந்திர ஃபட்னாவிஸ் (54) இளம் வயதில், தனது தந்தையை சிறையில் அடைத்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பெயரைக் கொண்ட (இந்திரா கான்வென்ட்) பள்ளியில் படிப்பைத் தொடர மறுத்து விட்டார். அதன் பிறகு சரஸ்வதி வித்யாலாயாவில் சேர்ந்து படித்தார். இதுவே அவரது அரசியல் பயணத்துக்கு தொடக்கமாக அமைந்ததுடன் பணக்கார மாநிலத்தின் முதல்வர் பதவியை எட்டிப் பிடிக்கவும் அடித்தளமாக அமைந்தது.
ஃபட்னாவிஸ் 27 வயதில் நாக்பூரின் இளைய மேயராகவும், பின்னர் மகாராஷ்டிராவின் இரண்டாவது பிராமண முதல்வராகவும் ஆனார். சமீபத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரங்களின்போது, ஃபட்னாவிஸ் ஆர்.எஸ்.எஸ். இணை பொதுச் செயலாளர் அதுல் லிமாயேவுடன் இணைந்து செயல்பட்டார். வாக்காளர்களை ஈர்ப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடியின் ‘ஏக் ஹைன் தோ சேப் ஹெய்ன்’ என்ற முழக்கத்தை திறம்பட பயன்படுத்தினார்.
ஃபட்னாவிஸின் அணுகக்கூடிய தலைமைத்துவ பாணி அவருக்கு பரவலான மரியாதையை பெற்றுத் தந்தது. முதல் முறையாக 2014-ம் ஆண்டில் முதல்வராக பதவியேற்ற ஃபட்னாவிஸ், மராத்தா இடஒதுக்கீடு பிரச்சினை உள்ளிட்ட முக்கிய சவால்களை திறமையாக கையாண்டார்.
முந்தைய அரசின் நீர்ப்பாசன ஊழலை அம்பலப்படுத்தியதன் மூலம், ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கான தனது உறுதிப்பாட்டை பட்னாவிஸ் வெளிப்படுத்தினார். அவரது தலைமையின் கீழ், மகாராஷ்டிரா குறிப்பிடத்தக்க உள்கட்டமைப்பு வளர்ச்சியைக் கண்டது. மேலும் ஜல் யுக்த் ஷிவார் போன்ற முயற்சிகள் மாநிலம் முழுவதும் நீர் நிர்வாகத்தை மாற்றி அமைத்தன.