ஜார்க்கண்டில் அமைச்சரவை விரிவாக்கம்: ஹேமந்த் சோரன் அரசில் 11 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு

ஜார்க்கண்டில் அமைச்சரவை விரிவாக்கம்: ஹேமந்த் சோரன் அரசில் 11 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு
Updated on
1 min read

ராஞ்சி: ஜார்க்கண்டில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான அரசில் 11 பேர் இன்று அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான இண்டியா கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 81 தொகுதிகளில் 56 தொகுதிகளை இக்கூட்டணி கைப்பற்றியது. பாஜக 21 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியைத் தொடர்ந்து கடந்த நவம்பர் 28ம் தேதி ஹேமந்த் சோரன் முதல்வராக பதவியேற்றார். இந்த பதவியேற்பு விழாவில் ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி உள்ளிட்ட இண்டியா கூட்டணி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் அமைச்சரவை விரிவாக்கம் இன்று நடைபெற்றது. இதில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியைச் சேர்ந்த சுதிவ்ய குமார், தீபக் பிருவா, ராம்தாஸ் சோரன், சாம்ரா லிண்டா, யோகேந்திர பிரசாத், ஹபிஜுல் ஹசன் ஆகிய 6 பேர் எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தீபிகா பாண்டே சிங், ஷில்பி நேஹா டிர்கி, இர்பான் அன்சாரி, ராதாகிருஷ்ண கிஷோர் ஆகிய 4 பேரும், ராஷ்டிர ஜனதா தளத்தைச் சேர்ந்த சஞ்சய் பிரசாத் யாதவும் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

ராஜ்பவனில் நடைபெற்ற இந்த பதவியேற்பு விழாவில் ஆளுநர் சந்தோஷ் கங்க்வார் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்துவைத்தார். பதவியேற்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஹேமந்த் சோரன், “காலம் வேகமாகச் செல்வதால், எல்லாம் விரைவாக நடந்து கொண்டிருக்கிறது. அரசாங்கத்தின் திசை தற்போது முடிவாகி இருக்கிறது. நாங்கள் வேகமாக முன்னேறுவோம்” என்று கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in