இந்தியாவில் 16.9 லட்சம் எய்ட்ஸ் நோயாளிகள்: மத்திய சுகாதாரத் துறை தகவல்

இந்தியாவில் 16.9 லட்சம் எய்ட்ஸ் நோயாளிகள்: மத்திய சுகாதாரத் துறை தகவல்
Updated on
1 min read

இந்தியாவில் 16.9 லட்சம் எய்ட்ஸ் நோயாளிகள் உள்ளனர் என்று மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் டிசம்பர் 1-ம் தேதி எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி மத்திய சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் எய்ட்ஸுக்கு எதிரான போர கடந்த 1985-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இதன்காரணமாக கடந்த சில ஆண்டுகளில் நாட்டில் எய்ட்ஸ் பாதிப்பு குறைந்துள்ளது.

இந்த ஆண்டு எய்ட்ஸ் தினத்தை ஒட்டி புதிய விழிப்புணர்வு பிரச்சாரம் தொடங்கப்பட்டிருக்கிறது. “உரிமையின் பாதையில் செல்லுங்கள். எனது உடல்நலம், என் உரிமை" என்ற கருப்பொருளின் அடிப்படையில் மக்களிடம் விழிப்புணர்வு ஏறபடுத்தப்படும். வரும் 2030-ம் ஆண்டுக்குள் எய்ட்ஸை ஒழிக்க உலக சுகாதார அமைப்பு இலக்கு நிர்ணயித்து உள்ளது. இந்த லட்சியத்தை எட்ட மத்திய சுகாதாரத் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் அனுபிரியா படேல் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: கடந்த 2019-20-ம் ஆண்டில் இந்தியாவில் 13.8 லட்சம் எய்ட்ஸ் நோயாளிகள் இருந்தனர். இந்த எண்ணிக்கை 2023-24 ஆண்டில் 16.9 லட்சமாக உயர்ந்துள்ளது. இதில் 8.7 லட்சம் பேர் ஆண்கள், 8 லட்சம் பேர் பெண்கள், 6,637 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள் ஆவர். கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் புதிதாக 3 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவ்வாறு அமைச்சர் அனுபிரியா படேல் தெரிவித்து உள்ளார்.

உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியா பிராந்திய இயக்குநர் சைமா வாசத் கூறும்போது,”தென்கிழக்கு ஆசிய நாடுகளில் சுமார் 80,000-க்கும் மேற்பட்ட சிறார்கள் எய்ட்ஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் 14 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர். சிறார்களை பாதுகாக்க உலக சுகாதார அமைப்பு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது" என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in