Published : 24 Jun 2018 08:52 AM
Last Updated : 24 Jun 2018 08:52 AM

பொதுமக்களின் உடல்நலன், மின் சிக்கனத்தை கருத்தில் கொண்டு ‘ஏசி’ இயந்திரத்தின் குறைந்தபட்ச வெப்பம் 24 டிகிரி: கட்டுப்பாடு விதிக்க மத்திய மின்துறை அமைச்சகம் பரிசீலனை

மின் சிக்கனம் மற்றும் பொதுமக்களின் உடல்நலன் கருதி ஏசி இயந்திரங்களின் குறைந்தபட்ச வெப்பநிலையை 24 டிகிரி செல்சியஸாக கட்டுப்படுத்துவது குறித்து மத்திய மின் துறை அமைச்சகம் பரிசீலித்து வருகிறது.

மத்திய மின்சாரத் துறை அமைச்சர் ஆர்.கே.சிங் கூறியதாக, அத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மனித உடலின் வெப்பநிலை 36 முதல் 37 டிகிரி செல்சியசாக உள்ளது. ஆனால் பல நிறுவனங்கள், ஓட்டல்கள் மற்றும் அலுவலகங்களில் உள்ள ஏசி இயந்திரங்கள், குறைந்தபட்சம் 18 முதல் 21 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பநிலையை பராமரிக்கும் வகையில் இயங்குகின்றன. இது பலருக்கு அசவுகரியத்தை ஏற்படுத்துகிறது. அது, உடல்நலனுக்கும் நல்லதல்ல.

இதன் காரணமாக குளிரை சமாளிப்பதற்காக கதகதப்பான ஆடைகள் அல்லது ஸ்வெட்டரை அணிய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதன் மூலம் மின்சாரமும் வீணாகிறது. ஜப்பான் உள்ளிட்ட சில நாடுகளில் ஏசி இயந்திரங்களில் குறைந்தபட்ச வெப்பநிலையை 28 டிகிரியாக பராமரிக்கும் வகையில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மின்சார அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் பேரில், ஆற்றல் சிக்கன அமைப்பு (பிஇஇ) ஆய்வு நடத்தி தனது அறிக்கையை சமர்ப்பித்தது. அதில், ஏசி இயந்திரங்களின் குறைந்தபட்ச வெப்பநிலையை 24 டிகிரியாக நிர்ணயிக்கலாம் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ஏசி உற்பத்தியாளர்களுடன் ஆலோசனை நடத்தினோம்.

மேலும் ஏசி மின் சிக்கனம் குறித்து பொதுமக்களிடையே 4 முதல் 6 மாதங்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்படும். அப்போது பொதுமக்களின் கருத்து கேட்கப்படும். இதன் அடிப்படையில் இறுதி முடிவு எடுக்கப்படும்.

இந்தப் பரிந்துரை ஏற்கப்படால், 24 டிகிரி செல்சியசுக்கு கீழ் வைக்க முடியாத அளவுக்கு ஏசி இயந்திரத்தில் கட்டுப்பாடு கொண்டுவரப்படும். இதன் மூலம் ஓராண்டில் 2,000 கோடி யூனிட் மின்சாரம் மிச்சமாகும். மக்களின் உடல்நலனுக்கும் இது நல்லது. மின் கட்டணமும் கணிசமாகக் குறையும். இவ்வாறு மின்துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x