Last Updated : 30 Jun, 2018 04:03 PM

 

Published : 30 Jun 2018 04:03 PM
Last Updated : 30 Jun 2018 04:03 PM

யாரை மீட்க மக்களின் பணத்தை பயன்படுத்துகிறார்கள்: பிரதமர் மோடிக்கு சீதாராம் யெச்சூரி கண்டனம்

கடனைக் கட்டாத பெரும் தொழிலதிபர்களையும், பணக்காரர்களையும் மக்களின் பணத்தைக் கொண்டு மீட்க முயலாதீர்கள் என்று பிரதமர் மோடிக்கு, மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கண்டனம் தெரிவித்துள்ளார்.

நஷ்டத்தில் இருக்கும் ஐடிபிஐ வங்கியின் 51 சதவீத பங்குகளை, எல்ஐசி நிறுவனம் வாங்கிக்கொள்ளக் காப்பீடு ஒழுங்கு முறை மேம்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளிக்க, அரசு அனுமதி அளித்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இதற்கு எதிர்க்கட்சிகள் மத்தியில் பெரும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

ஐடிபிஐ வங்கியில் பெரும் தொழிலதிபர்கள், பணக்காரர்கள் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி கடன் பெற்று திருப்பிக்கட்டாமல் வங்கியை நஷ்டமாக்கிவிடுவார்கள், அந்தவங்கியை மீட்டெடுக்க, மக்களின் பணத்தை பயன்படுத்துவதா என்று காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் கேள்வி எழுப்பின.

இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, பிரதமர் மோடியின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து ட்விட் செய்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

‘‘நஷ்டத்தில் இயங்கும் ஐடிபிஐ வங்கியின் 51சதவீத பங்குகளை எல்ஐசி நிறுவனம் வாங்குவதற்கு இந்திய காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு நிறுவனம் அனுமதியளித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

பிரதமர் மோடி தலைமையில் இயங்கும் மத்திய அரசின் செயல்பாடு, ஒழுங்குமுறை செயல்பாட்டு அமைப்பைச் சிதைக்கும் முயற்சியாகும். அரசியல்வாதிகள், அதிகாரிகளுடன் கைகோர்த்து பணக்கார்கள் செயல்படும் முறை மிகவும் மோசமானது.

பெரும் பணக்காரர்கள், தொழிலதிபர்கள் ஐடிபிஐ வங்கியில் கடன்பெற்று வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தாமல் இருப்பார்கள். அவர்களை மக்களின் காப்பாற்ற மக்களின் பணத்தை பயன்படுத்துவதா. எல்ஐசி நிறுவனத்தில் இருப்பது மக்களின் பணம். வங்கியில் கடன் பெற்று வேண்டுமென்ற திருப்பிச் செலுத்தாமல் இருப்பவர்களிடம் கடனை திருப்பி வசூலித்தீர்களா.

மோடி அரசில் அரசு அதிகாரிகளுடன் இணைந்து பணக்காரர்கள் செய்யும் ஊழல், விதிமுறைகள், வரிச்சலுகைகள் பெரும் குரோனி கேப்டலிஸம் அதிகரித்துவருகிறது. ஜனநாயகத்தில் இது மிகவும் மோசமானதாகும். பணக்காரர்கள் கொள்ளையடித்து, எளிதாகத் தப்பிக்க முடியும். அவர்கள் பெற்ற கடனை சாமானிய மக்கள் செலுத்த வேண்டும்.

அவ்வப்போது தேவைக்கு ஏற்றார்போல் விதிமுறைகளை மாற்றிக்கொள்வதற்கு எல்ஐசி நிறுவனம் என்பது வங்கி அல்ல. காப்பீடு நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும், ஒழுங்குமுறை செயல்பாட்டு அமைப்புகளை எல்லாம், மோடி அரசு சிதைக்கிறது. இதனால், கடன் பெற்ற பணக்காரர்கள் யாரும் கடனை திருப்பிச் செலுத்துவதில்லை. நாட்டில் என்ன நடக்கிறது’’ என யெச்சூரி கண்டனம் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x