Published : 09 Jun 2018 02:34 PM
Last Updated : 09 Jun 2018 02:34 PM

கனமழையால் மிதக்கும் மும்பை - ‘வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்’ என போலீஸார் எச்சரிக்கை

மும்பையில் கனமழை கொட்டி தீர்த்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. ரயில், விமானம், வாகனப் போக்குவரத்து முடங்கியுள்ளது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என போலீஸார் எச்சரித்துள்ளனர்.

தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்கியது. கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் மழை பெய்து வருகிறது. இதேபோல் தெலுங்கானா, ஆந்திராவிலும் தென்மேற்கு பருவமழை தொடங்கியது.

இந்த நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் தென் மேற்கு பருவமழை இருதினங்களுக்கு முன்பு தொடங்கியது. மும்பையில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. வெளியே செல்ல முடியாமல் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். வேலைக்கு செல்லும் ஊழியர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெரும்பாலான சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அரசு பேருந்து குறைவான அளவே இயக்கப்படுகின்றன. ரயில் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. புறநகர் மின்சார ரயில்கள் காலதாமதமாக இயக்கப்படுகின்றன. விமான சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கடுமையான மழை கொட்டி வருவதால், தேவை இருந்தால் மட்டுமே வீட்டை விட்டு வெளியே வருமாறு மக்களுக்கு போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர். அதுபோவே தாழ்வான பகுதகிளில் வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மின்சார சேவை பாதிக்கப்படலாம் என்பதால் உரிய பாதுகாப்புடன் இருக்குமாறு மின்சார வாரியமும் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x