உணவு பாதுகாப்பு தொடர்பாக பிரதமர், அமைச்சர் பேச்சில் முரண்பாடு: மாநிலங்களவையில் எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டு

உணவு பாதுகாப்பு தொடர்பாக பிரதமர், அமைச்சர் பேச்சில் முரண்பாடு: மாநிலங்களவையில் எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டு
Updated on
1 min read

உலக வர்த்தக அமைப்பில் உணவுப் பாதுகாப்பு தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு குறித்து பிரதமர் நரேந்திர மோடியும், அமைச்சர் நிர்மலா சீதாராமனும் தெரிவித்த கருத்துகள் முரண் பாடானதாக உள்ளன என்று மாநிலங்களவையில் எதிர்க் கட்சியினர் குற்றம் சாட்டினர்.

எந்தவிதமான முரண்பாடும் இல்லை என்று மத்திய நிதி யமைச்சர் அருண் ஜேட்லி கூறினார்.

மாநிலங்களவையில் காங் கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய தொழில் வர்த்தகத் துறை அமைச்சருமான ஆனந்த் சர்மா, “உலக வர்த்தக அமைப்பு தொடர்பாக அரசு தரப்பில் இருவேறு கருத்துகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக விவாதிக்க அவையின் கேள்வி நேரத்தை ரத்து செய்ய வேண்டும்.

உலக வர்த்தக அமைப்பில் உணவுப் பாதுகாப்பு தொடர்பாக கடந்த 5-ம் தேதி மத்திய தொழில் வர்த்தகத் துறை இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்த கருத்துக்கும், கடந்த சனிக்கிழமை பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளதற்கும் முரண்பாடு உள்ளது” என்றார்.

ஆனால், அவைத் தலைவர் ஹமீது அன்சாரி, கேள்வி நேரத்தை தொடங்க உறுப்பினர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

ஆனால், அதற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரி வித்தனர்.

அப்போது பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், “மோடி, நிர்மலா சீதாராமன் ஆகியோர் தெரிவித்த கருத்துக ளில் எவ்வித முரண்பாடும் இல்லை. நீங்கள் (காங்கிரஸ்) விவ சாயிகளுக்கு நம்பிக்கை துரோகம் செய்தீர்கள். நாங்கள் அவர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுத் துள்ளோம்” என்றார்.

உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால், அவை நடவடிக்கைகள் 10 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டன.

பின்னர் மீண்டும் அவை கூடியதும், கடும் அமளிக்கிடையே பேசிய மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், “உணவுப் பாதுகாப்பு தொடர்பாக முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசு எடுத்த நிலைப்பாட்டை உலக நாடுகள் அனைத்தும் பாராட்டின” என்றார்.

மார்க்சிஸ்ட் மூத்த உறுப்பினர் சீதாராம் யெச்சூரி கூறும்போது, “பிரதமர், அமைச்சர் தெரிவித்த கருத்துகளில் உள்ள முரண்பாடு குறித்து விளக்கம் தேவை” என்றார்.

அப்போது, மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி பேசும்போது, “பிரதமர், அமைச்சர் பேச்சில் எந்தவிதமான முரண்பாடும் இல்லை. வர்த்தக அமைச்சர் தெரிவித்த கருத்துதான் எங்களின் நிலைப்பாடு” என்றார்.

ஆனால், அதை ஏற்றுக் கொள்ளாத எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட் டனர். இதையடுத்து மீண்டும் அவை நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in