ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்பு - நிகழ்வில் கார்கே, ராகுல், உதயநிதி பங்கேற்பு

முதல்வராக பதவியேற்ற ஹேமந்த் சோரன்
முதல்வராக பதவியேற்ற ஹேமந்த் சோரன்
Updated on
1 min read

ராஞ்சி: ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் இன்று பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் சந்தோஷ் குமார் கங்வார் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். இந்த நிகழ்வில் கார்கே, ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், உதயநிதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஜார்க்கண்ட்டில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான இண்டியா கூட்டணி மொத்தமுள்ள 81 தொகுதிகளில் 56 இடங்களைக் கைப்பற்றியது. இதில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 34 தொகுதிகளிலும், காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் 4 இடங்களிலும், சிபிஐ-எம்எல் 2 இடங்களிலும் வெற்றி பெற்றன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 24 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. ஜார்க்கண்ட்டில் முதல்முறையாக ஒரு அரசு 5 ஆண்டுகளை பூர்த்தி செய்து மீண்டும் ஆட்சி அமைப்பது இதுவே முதல்முறை.

இண்டியா கூட்டணியின் வெற்றியை அடுத்து, முதல்வர் பதவியை ராஜினாமா செய்த ஹேமந்த் சோரன், கடந்த 24ம் தேதி ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதனையடுத்து அவரை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். ராஞ்சியில் உள்ள மொராபாதி மைதானத்தில் நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில் ஜார்க்கண்ட்டின் 14வது முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் சந்தோஷ் குமார் கங்வார் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்துவைத்தார்.

இந்த பதவி ஏற்பு விழாவில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in