Published : 18 Jun 2018 12:57 PM
Last Updated : 18 Jun 2018 12:57 PM

கவுரி லங்கேஷ் கொலை விவகாரம்; ராம் சேனா தலைவர் சர்ச்சை கருத்து: காங்கிரஸ் கண்டனம்

பெங்களூரில் சுட்டுக் கொல்லப்பட்ட எழுத்தாளர் கவுரி லங்கேஷ் குறித்து ராம் சேனா தலைவர் பிரமோத் முத்தாலிக் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசியிருப்பதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

முற்போக்கு எழுத்தாளரும், பத்திரிக்கையாளருமான கவுரி லங்கேஷ் மூடப்பழக்கத்தையும், இந்து வலதுசாரி அமைப்புக்கும் எதிராகக் கடுமையாக பேசியும், எழுதியும் வந்தார். இந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 5-ம் தேதி தனது வீட்டின் முன் மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டு கவுரி லங்கேஷ் கொல்லப்பட்டார்.

இந்த கொலையில் ஏறக்குறைய 6 மாதங்களுக்குப் பின் குற்றம்சாட்டப்பட்டவர்கள் எனச் சந்தேகிக்கும் 6 பேரை சிறப்பு புலனாய்வுப் பிரிவினர்கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கவுரிலங்கேஷ் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் இதுவரை பிரதமர் மோடி எந்தவிதமான கருத்தும் தெரிவிக்கவில்லை. கவுரி லங்கேஷை சுட்டுக்கொலை செய்ததற்கு பேஸ்புக்கில் பாராட்டுத் தெரிவிக்கும் பலர் மோடியின் ஆதரவாளர்களாக இருந்து வருகின்றனர் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் குற்றம் சாட்டி இருந்தார்.

இந்நிலையில், ஸ்ரீ ராம் சேனா அமைப்பின் தலைவர் பிரமோத் முத்தாலிக், கவுரி லங்கேஷ் கொலையில் மோடி கருத்து ஏதும் தெரிவிக்காதது குறித்து பொதுக்கூட்டம் ஒன்றில் பேசினார் அப்போது அவர் கூறுகையில், இந்துத்துவா அமைப்புகள்தான் கவுரி லங்கேஷை கொலை செய்துவிட்டதாகக் கூறுகின்றன. மகாராஷ்டிராவில் 2 நரேந்திர தபோல்கர், இடதுசாரித் தலைவர் கோவிந்த் பன்சாரே ஆகியோர் காங்கிரஸ் ஆட்சியில் கொல்லப்பட்டனர்,

கர்நாடகாவில் கன்னடஎழுத்தாளர் எம்எம் கல்புர்க்கி காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கொல்லப்பட்டார். அது குறித்து யாரும் பேசுவதில்லை, ஆனால், இந்துத்துவா குழுக்கள் கொலை செய்ததாக மட்டும் பேசுகிறார்கள். காங்கிரஸ் அரசின் தோல்விகளை குறித்து யாரும் கேள்வி கேட்பதில்லை.ஆனால், இடதுசாரி அறிவுஜீவிகள், கவுரி லங்கேஷ் கொலையில் பிரதமர் மோடி கருத்துச் சொல்ல வேண்டும் என்று கேட்கிறார்கள்.

கர்நாடகாவில் நாய் செத்தால்கூட பிரதமர் மோடி கருத்துச் சொல்ல வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா? எனத் தெரிவித்தார்.

ஆனால், பின்னர் தனது கருத்தில் இருந்து மாறுபட்டுப் பேசிய பிரதமோத் முத்தாலிக், நான் கவுரிலங்கேஷை நாயுடுடன் நேரடியாக ஒப்பிட்டுப் பேசவில்லை. கர்நாடகத்தில் நடக்கும் ஒவ்வொரு கொலைக்கும், பிரதமர் மோடி கருத்துக் கூறிக்கொண்டிருக்க முடியாது என்ற அர்த்தத்தில்தான் கூறினேன் எனத் தெரிவித்தார்.

இதற்கு காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் மணீஷ் திவாரி ட்விட்டரில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ‘‘மிகவும் வெறுக்கத்தக்க, அறுவறுப்பு கொள்ளக் கூடிய, கலகம் விளைவிக்கும் சட்டத்தை கையில் எடுத்துச் செயல்படக்கூடிய சிறீ ராம்சேனா அமைப்பின் தலைவர் பிரமோத் முத்தாலிக் மூத்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷை நாயுடன் ஒப்பிட்டுப் பேசி இருக்கிறார். பிரதமர் மோடி, கவுரி லங்கேஷ் கொலையைத் தான் கண்டிக்கவில்லை, தயவு செய்து, இதுபோன்று கவுரி லங்கேஷை மோசமாகப் பேசும் இதுபோன்றோர் கூட நீங்கள் கண்டிக்கமாட்டீர்களா’’ என்று கேள்விஎழுப்பியுள்ளார்.

கவுரி லங்கேஷ் கொலையில், கடந்த வாரம் விஜயபுரா மாவட்டம் ராம் சேனா அமைப்பின் தலைவர் ராகேஷ் மாத்துக்கு சம்மன் அனுப்பிச் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு அழைத்துள்ளனர். கவுரி லங்கேஷை சுட்டதாக சந்தேகிக்கப்படும் பரசுராம் வாக்மாரேவுக்கும் ராகேஷ் மத்துக்கும் இருக்கும் தொடர்புகுறித்து விசாரிக்க உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x