

பாஜக மூத்த தலைவர் விஜேந்திர குப்தாவுக்கு எதிராக தான் தொடுத்த அவமதிப்பு வழக்கு ஒன்றில், நீதிமன்றத்தில் ஆஜராகததால் டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்துக்கு டெல்லி நீதிமன்றம் சனிக்கிழமை ரூ.3 லட்சம் அபராதம் விதித்தது.
கடந்த 2012-ம் ஆண்டு நடைபெற்ற டெல்லி மாநகராட்சி தேர்தலின்போது, மின்சார உற்பத்தி நிறுவனங்களுக்கு சாத கமாக செயல்படுவதாக ஷீலா மீது குற்றம்சாட்டி பேசியுள்ளார் குப்தா. அப்போது தகாத வார்த்தையை தனக்கு எதிராக குப்தா பயன்படுத்தியதாகக் கூறி டெல்லி பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார் ஷீலா.
இதையடுத்து, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 6-ம் தேதி குப்தா மீது நீதிமன்றம் அவமதிப்பு குற்றச்சாட்டு பதிவு செய்தது. இதுதொடர்பாக விசாரிப்பதற்கு சனிக்கிழமை நேரில் ஆஜராகுமாறு ஷீலா தீட்சித்துக்கு மாஜிஸ்திரேட் நேஹா உத்தரவிட்டிருந்தார். ஆனால் நேரில் ஆஜராகாததால் ஷீலாவுக்கு நீதிமன்றம் ரூ.3 லட்சம் அபராதம் விதித்தது.
இதில் ரூ.2 லட்சத்தை டெல்லி மாநில சட்ட சேவைகள் ஆணையத்தில் (டிஎல்எஸ்ஏ) செலுத்துமாறும் ரூ.1 லட்சத்தை குப்தாவிடம் வழங்குமாறும் உத்தர விடப்பட்டது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை டிசம்பர் 20-ம் தேதிக்கு ஒத்தி வைத்த நீதிமன்றம், அன்றைய தினம் நேரில் ஆஜராகுமாறு ஷீலாவுக்கு உத்தரவிட்டது.
இதே காரணத்துக்காக ஏற்கெனவே ஷீலாவுக்கு நீதிமன்றம் ரூ.5,000 அபராதம் விதித்தது குறிப்பிடத்தக்கது.