

யுபிஎஸ்சி திறனறித் தேர்வை ரத்து செய்யக் கோரி டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வீட்டின் முன் திரண்ட மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, டெல்லி நேரு விஹாரில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீஸ் தாக்குதல் கட்டவிழ்த்துவிடப் பட்டதைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
என்.எஸ்.யு.ஐ. அமைப்பு பொதுச் செயலர் மோஹித் சர்மா தலைமையில் இன்று காலை 9.30 மணியளவில் அமைச்சர் வீட்டின் முன் திரண்ட மாணவர்கள் திறனறித் தேர்வை ரத்து செய்யக் கோரி பலத்த கோஷம் எழுப்பினர். பாஜக தலைமையிலான மத்திய அரசை விமர்சித்த பேனர்களை ஏந்தியிருந்தனர். போலீஸார் தடியடி நடத்தி மாணவர்கள் கூட்டத்தை கலைத்தனர். தடியடியில், 100-க்கும் மாணவர்கள் காயமடைந்தனர்.
2011-ல் யு.பி.எஸ்.சி.யில் அறிமுகப்படுத்தப்பட்ட சி-சாட் எனும் தொடக்கநிலைத் தேர்வின் வினாக்கள் ஆங்கிலப் புலமை பெற்ற மாணவர்களுக்கு மட்டும் சாதகமாக இருப்பதாகவும் கிராமப்புற மாணவர்கள், தாய் மொழியில் கல்வி பயின்றவர்களால் எழுத முடியாத நிலைமை உள்ள தாகவும் புகார் கூறப்பட்டு வருகிறது.
இந்தப் பிரச்சினை யில் மாணவர்கள் அவ்வப்போது நடத்தி வந்த போராட்டங்கள் கடந்த 25 நாட்களாக தீவிரமடைந்தது. இதுகுறித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. இதனால் நாடாளுமன்றம் முடங்கியது என்பது கவனிக்கத்தக்கது.