உ.பி - குந்தர்கி இடைத்தேர்தலில் 11 வேட்பாளர்களையும் டெபாசிட் இழக்கச் செய்த பாஜக வேட்பாளர்!

ராம்வீர் சிங்
ராம்வீர் சிங்
Updated on
1 min read

புதுடெல்லி: உத்தரப் பிரதேச மாநிலம், குந்தர்கி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட ஒரே ஒரு இந்து பாஜக வேட்பாளரான ராம்வீர் தாகூர் வெற்றி முகம் கண்டுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அனைத்து 11 முஸ்லிம் வேட்பாளர்களும் டெபாசிட் இழக்கின்றனர்.

உ.பி.யின் 9 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் சனிக்கிழமை இடைத்தேர்தல் நடைபெற்றது. இவற்றின் 7 தொகுதிகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி (என்டிஏ) வெற்றி முகத்தில் உள்ளது. மெயின்புரியின் கர்ஹால் மற்றும் கான்பூரின் சிசாமு ஆகிய இருதொகுதிகளில் மட்டும் சமாஜ்வாதி வெற்றிமுகம் கண்டது. என்டிஏ முன்னணி வகிக்கும் ஏழு தொகுதிகளில், பாஜக 6 மற்றும் அதன் கூட்டணியான ராஷ்டிரிய லோக் தளம் ஒன்றிலும் வெற்றி முகம் கண்டது.

பாஜக கைப்பற்றும் ஆறு தொகுதிகளில் முராதாபாத் மாவட்டத்தில் குந்தர்கியில் வித்தியாசமான நிலை உருவாகி உள்ளது. இங்கு மொத்தம் 12 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இவர்களில் பாஜகவின் வேட்பாளரான ராம்வீர் தாகூர் மட்டுமே இந்துவாக உள்ளார். இவரை எதிர்த்த சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) உள்ளிட்ட 11 வேட்பாளர்கள் அனைவரும் முஸ்லிம்கள்.

இந்நிலையில், மாலை வரை வெளியான தேர்தல் முடிவுகள் நிலவரப்படி, பாஜகவின் ராம்வீருக்கு வெற்றி முகம் தெரிகிறது. இதர 11 முஸ்லிம் வேட்பாளர்களும் தங்களது டெபாசிட் இழக்கும் நிலை உருவாகி உள்ளது. பாஜகவின் ராம்வீருக்கு மாலை 5.00 மணி வரை 16.66 சதவிகித வாக்குகள் கிடைத்தன. சமாஜ்வாதியின் ஹாஜி முகம்மது ரிஜவானுக்கு 10 சதவிகிதமும் இதர வேட்பாளர்களுக்கு இதை விடக் குறைவாகவும் வாக்குகள் கிடைத்துள்ளன.

சமாஜ்வாதியில் முகம்மது ரிஜ்வான், குந்தர்கியின் எம்எல்ஏவாக 2002, 2012 மற்றும் 2019-இல் இருந்தவர். இவருடன், ஹைதராபாத்தின் அசாதுத்தீன் எம்பியின் ஏஐஎம்ஐ கட்சியின் முகம்மது வாரிஷ், பிஎஸ்பியில் ரஃபத்துல்லா, ஆசாத் சமாஜ் கட்சியின் சாந்த் பாபு மற்றும் இதர வேட்பாளர்கள் சுயேச்சைகளாக உள்ளனர். குந்தர்கியில் சுமார் 65 சதவிகித வாக்காளர்கள் முஸ்லிம்கள். இதன் காரணமாகவே எதிர்க்கட்சி வேட்பாளர்கள் அனைவரும் முஸ்லிம்களாக போட்டியிட்டனர். இந்நிலையில், பாஜகவின் ராம்வீர் வெற்றி பெறும் நிலை உருவாகிவிட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in