நேதாஜி மரணம் பற்றி விசாரணை கோரிய மனு தள்ளுபடி

நேதாஜி மரணம் பற்றி விசாரணை கோரிய மனு தள்ளுபடி
Updated on
1 min read

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.

விடுதலைப் போராட்ட தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் கடந்த 1945-ல் தைவானில் நிகழ்ந்த விமான விபத்தில் உயிரிழந்தார் என தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் ஏற்கெனவே எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய அரசு பதில் அளித்துள்ளது.

இந்நிலையில் நேதாஜியின் மரணம் குறித்து உத்தரவிடக் கோரி பினாக் பானி மொகந்தி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். மொகந்தி தன்னை, மனித உரிமைகள் மற்றும் பொதுநலனுக்காக பாடுபடும் உலக மனித உரிமைகள் பாதுகாப்பு அமைப்பின் (இந்தியா) கட்டாக் மாவட்ட செயலாளர் என்று குறிப்பிட்டுள்ளார்.

அவரது மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சூர்ய காந்த், உஜ்ஜல் புயான் ஆகியோரை கொண்ட அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, “எல்லா பிரச்சினைகளுக்கு உச்ச நீதிமன்றம் தீர்வு அளிக்க முடியாது. அரசை நடத்துவது நீதிமன்றத்தில் வேலை இல்லை" என்று கூறி மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

மேலும் மனுவில் உயிருடன் இல்லாத தலைவர்களுக்கு எதிராக பொறுப்பற்ற குற்றச்சாட்டுகள் இருப்பதாகக் கூறி, மனுதாரருக்கு கண்டனம் தெரிவித்தனர்.

“மனுதாரர் தனது மனுவில் மகாத்மா காந்தியை கூட விட்டு வைக்கவில்லை. மனுதாரரின் நேர்மையை பரிசோதிக்க வேண்டியுள்ளது" என்று நீதிபதிகள் சாடினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in