மணிப்பூரில் பாஜக கூட்டணி அரசில் இருந்து என்பிபி விலகல்

மணிப்பூரில் பாஜக கூட்டணி அரசில் இருந்து என்பிபி விலகல்
Updated on
1 min read

இம்பால்: மணிப்பூரில் பாஜக கூட்டணி அரசில் இருந்து தேசிய மக்கள் கட்சி (என்பிபி) விலகி உள்ளது.

கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி, குகிசமுதாயங்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக மாநிலம் முழுவதும் கலவரம் வெடித்து 237 பேர் உயிரிழந்தனர். 60,000-க்கும் மேற்பட்டோர் இடம் பெயர்ந்தனர். 11,000-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

மணிப்பூரில் அமைதி திரும்பி வந்த நிலையில் கடந்த 11-ம் தேதி ஜிரிபாம் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் குகி சமுதாயத்தை சேர்ந்த 11 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதற்கு பதிலடியாக கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜிரிபாம் மாவட்டத்தில் குகி தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட மைதேயி சமூகத்தை சேர்ந்த 6 பேர் கொல்லப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து மணிப்பூர் மாநிலம் முழுவதும் மீண்டும் கலவரம் வெடித்துள்ளது. ஜிரிபாம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ஊரடங்கு அமல் செய்யப்பட்டிருக்கிறது.

மணிப்பூரில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது பிரச்சாரத்தை ரத்து செய்துவிட்டு டெல்லி திரும்பி உள்ளார். மணிப்பூரில் பாதுகாப்பை அதிகரிப்பது குறித்து ராணுவம் மற்றும் மத்திய படைகளின் உயர் அதிகாரிகளுடன் அவர் முக்கிய ஆலோசனை நடத்தி வருகிறார்.

மணிப்பூர் சட்டப்பேரவையில் மொத்தம் 60 எம்எல்ஏக்கள் உள்ளனர். அந்த மாநிலத்தில் முதல்வர் பிரேன் சிங் தலைமையில் பாஜக கூட்டணி அரசு ஆட்சி நடத்தி வருகிறது. இதில் தேசிய மக்கள் கட்சியும் (என்பிபி) இடம் பெற்றிருந்தது.

மணிப்பூரில் அமைதியை ஏற்படுத்த பாஜக தவறிவிட்டதாக குற்றம் சாட்டி என்பிபி கட்சி பாஜக கூட்டணி அரசில் இருந்து நேற்று விலகியது. என்பிபி கட்சியில் 7 எம்எல்ஏக்கள் உள்ளனர். மணிப்பூர் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 31 எம்எல்ஏக்கள் தேவை. பாஜகவுக்கு 32 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதனால் பாஜக அரசுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in