பிஹாரில் உயிரிழந்தவர்களின் உரிம துப்பாக்கி அரசிடம் ஒப்படைக்கப்படுவதில்லை: சட்டவிரோத நடவடிக்கைக்கு விற்பதாக புகார்

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

புதுடெல்லி: வட மாநிலங்களில் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளவர்கள், மற்றும் கவுரவத்துக்காக பலர் அரசிடம் அனுமதி பெற்று துப்பாக்கி வைத்துள்ளனர். ஒருவேளை துப்பாக்கிச் சூடு நடந்தால், எந்தச் சூழ்நிலையில் துப்பாக்கிச் சூடு நடந்தது. எத்தனை குண்டுகள் பயன்படுத்தப்பட்டன என்று அவர்கள் அரசுக்கு கணக்கு காட்ட வேண்டும்.

துப்பாக்கிக்கான உரிமங்களை ஆட்சியர்கள் அளிக்கின்றனர். உரிமம் பெற்றவர்கள் இறந்து விட்டால் அதை அவர்களது வாரிசுகளில் ஒருவருக்கு மாற்றிக் கொடுக்கும் வாய்ப்புகள் உள்ளன. அல்லது அவரது வாரிசுகள் துப்பாக்கியை அரசிடம் ஒப்படைக்க வேண்டும். பழைய துப்பாக்கிக்கான ஒரு தொகையை அவர்களது வாரிசுகளுக்கு அரசு கொடுத்து விடுகிறது.

ஆனால், பிஹாரில் இறந்தவர்களில் பலருடைய உரிமம் மற்றும் துப்பாக்கிகளை அரசிடம் ஒப்படைக்காமல் அவற்றை குற்றச்செயல் புரியும் கிரிமினல்களுக்கு விற்கப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது. பிஹாரின் முசாபர்பூர் மாவட்டத்தில் மட்டும் 3,200 துப்பாக்கி உரிமங்கள் பெற்றவர்கள் இறந்துள்ளனர். அவற்றில் ஒன்று கூடஅரசிடம் திரும்ப ஒப்படைக்கப் படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த துப்பாக்கிகளில் சில சமீபத்தில் பிஹாரில் கைதான கிரிமினல்களிடம் இருந்து மீட்கப்
பட்டுள்ளன. இதையடுத்து பிஹார் காவல் துறை தலைமையகம் சார்பில் அனைத்து காவல்நிலையங்களுக்கும் அனுப்பியுள்ள உத்தரவில், ‘‘இறந்தவர்கள் வைத்திருந்த உரிமங்களுட னான துப்பாக்கிகளின் நிலை குறித்து அறிக்கை அளிக்க வேண்டும்’’ என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் பிஹார் காவல் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘இறந்துபோனவர்கள் வைத்திருந்த துப்பாக்கி உரிமங்கள் மூலம், குண்டுகளும் எளிதாகக் கிடைத்து விடுகின்றன. இதன்காரணமாக, இந்த வகை துப்பாக்கிகளுக்கு அதிக தொகை கிடைத்து விடுகிறது. போலி உரிமங்களை விற்பதும் அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in