

ஹைதராபாத்: பஞ்சாப்பி பாடகரும், நடிகருமான திலிஜித் தோஸாஞ்சின் இசை நிகழ்ச்சி இன்று (வெள்ளிக்கிழமை) மாலை ஹைதராபாத்தில் நடைபெறவுள்ள நிலையில், அவரது நிகழ்ச்சியில் மது, போதை வஸ்துக்கள், வன்முறையை ஊக்குவிக்கும் வார்த்தைகள் கொண்ட பாடல்கள் இடம்பெறக்கூடாது தெலங்கானா அரசு அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பிரபல பாடகர் திலிஜித் திலிஜித் தோஸாஞ்ச் இந்தியாவின் 10 பெரிய நகரங்களில் தில்-லுமினாட்டி டூர் ( Dil-Luminati Tour) என்ற பெயரில் இசை நிகழ்ச்சி நடத்துகிறார். அந்தவகையில் ஹைதராபாத்தில் இன்று மாலை அவரது இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இந்நிலையில் சண்டிகரைச் சேர்ந்த நபர் ஒருவர் அளித்த கோரிக்கை மனுவின் அடிப்படையில் மாவட்ட பெண்கள், குழந்தைகள் நலவாரியத் துறை அதிகாரி சார்பில் திலிஜித்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அதில் திலிஜித்தின் நிகழ்ச்சியில் இடம்பெறும் பாடல்களில் மது, போதை வஸ்துக்கள், வன்முறையை ஊக்குவிக்கும் வரிகள் இருக்கக் கூடாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இசை நிகழ்ச்சியில் மேடையில் குழந்தைகள் இருக்கக் கூடாது. ஏனெனில் அரங்கத்தில் இருக்கும் ஃப்ளாஷ் லைட், அதிரவைக்கும் சத்தம் குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
திலிஜித் நிகழ்ச்சிக்கு கெடுபிடி கோரி மனு தாக்கல் செய்தவர் தன் மனுவில், “திலிஜித் தோஸாஞ்ச் கடந்த மாதம் புது டெல்லியில் ஜவஹர்லால் நேரு மைதானத்தில் நடத்திய நிகழ்ச்சியில் மது, போதை, வன்முறையை ஊக்குவித்து பாடிய ஆதாரங்களை சமர்ப்பிந்திருந்தார். இதன் அடிப்படையில் தான் தற்போது அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இதற்கிடையில் நிகழ்ச்சிக்காக ஹைதராபாத் வந்தடைந்த திலிஜித் வரலாற்று சிறப்புமிக்கு சார்மினார் நினைவிடத்துக்குச் சென்றார். கோயில், குருத்வாராவில் தரிசனம் செய்தார். இது தொடர்பான புகைப்படங்கள் அவரது சமூக வலைதளப் பக்கங்களில் இடம் பெற்றுள்ளன.
நடிகராக மிளிர்ந்த திலிஜித் - கடந்த 1980களில் பஞ்சாப் மாநிலத்தில் மிகப் பிரபலமான இருந்த மேடைப் பாடகர் அமர் சிங் சம்கிலா. 27 வயதிலேயே சுட்டுக் கொல்லப்பட்ட சம்கிலாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இம்தியாஸ் அலி இயக்கியுள்ள படம் ‘சம்கிலா’. இதி சம்கிலாவாக நடித்து திலிஜித் தோஸாஞ்ச் பாராட்டைப் பெற்றது நினைவுகூரத்தக்கது.