கடும் காற்று மாசு எதிரொலி: ஆன்லைன் வகுப்புக்கு மாறும் டெல்லி பள்ளிகள்

கடும் காற்று மாசு எதிரொலி: ஆன்லைன் வகுப்புக்கு மாறும் டெல்லி பள்ளிகள்
Updated on
1 min read

புதுடெல்லி: டெல்லியின் காற்று மாசு அபாயகட்டத்தை எட்டியதை தொடர்ந்து தரப்படுத்தப்பட்ட செயல் திட்டம் நிலை 3 (GRAP III)-ன் கீழ் மாசுக்கட்டுப்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்பு எடுக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள டெல்லி முதல்வர் அதிஷி, “அதிகரித்து வரும் காற்று மாசு அளவு காரணமாக, டெல்லியில் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகளும் மறு உத்தரவு வரும் வரை ஆன்லைன் வகுப்புகளுக்கு மாறுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டெல்லி கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அடுத்த அறிவிப்பு வரும் வரை 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளி வகுப்புகளை தவிர்த்துவிட்டு, ஆன்லைன் வகுப்பு மூலம் பாடங்களை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வருகிறது.

மோசமான காற்றின் தரத்துக்கு எதிராக தரப்படுத்தப்பட்ட செயல் திட்டம் நிலை 3 (GRAP III)-ன் கீழ் மாசுக்கட்டுப்பாடு நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து டெல்லி அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. டெல்லியின் காற்றின் தரம் வியாழக்கிழமை (நவ.14) கடுமையாக இருந்தது. காலை 9 மணியளவில் காற்றின் தரக்குறியீடு 432 ஆக இருந்தது. முன்னதாக டெல்லியின் காற்றின் தரம் புதன்கிழமை நாட்டிலேயே மிகவும் மோசமானதாக அறிவிக்கப்பட்டது. இந்த சீசனில் முதல் முறையாக டெல்லியின் காற்றின் தரம் கடுமையானதாக மாறியது.

மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் காற்றின் தரம் 0-50 இருந்தால் "நல்லது" என்றும், 401-க்கு மேல் சென்றால் "மோசமானது" என்றும் வரையறுக்கிறது. ஆனால் டெல்லியின் காற்று மாசு 430-ஐ தாண்டி சென்றுவிட்டதால் இது பொதுமக்களுக்கு மோசமான வியாதிகளை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in