Published : 18 Jun 2018 12:40 PM
Last Updated : 18 Jun 2018 12:40 PM

கேரளாவில் பேட்டரியில் இயங்கும் அரசு பேருந்து: டீசல் இனி தேவையில்லை

கேரளாவில் முதன்முறையாக டீசலுக்கு மாற்றாக, சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத பேட்டரியில் இயங்கும் அரசு பேருந்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அடுத்த 6 மாதங்களுக்குள் 300 பேட்டரி பேருந்துகளை இயக்கவும் கேரள அரசு திட்டமிட்டுள்ளது.  

கேரள அரசு சுற்றுச்சூழல் மாசை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, அம்மாநில அரசு போக்குவரத்துக்கழகம் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக பேட்டரியில் இயங்கும் நவீன பேருந்தை கேரள அரசு இன்று அறிமுகம் செய்துள்ளது. மாநில போக்குவரத்து அமைச்சர் டொமின் தச்சன்காரி திருவனந்தபுரத்தில் இந்த பேருந்தின் முதல் பயணத்தை இன்று தொடங்கி வைத்தார்.

5 மணிநேரம் பேட்டரியை சார்ஜ் செய்தால் தொடர்ந்து 350 கிலோ மீட்டர் தூரத்திற்கு பேருந்தை இயக்க முடியும். குளிர் சாதன வசதி கொண்ட இந்த பேருந்தில் 35 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. வேக கட்டுப்பாட்டு கருவி, தானியங்கி முறையில் கதவுகள் மூடி-திறக்கும் வசதிகள் என பாதுகாப்பு ஏற்பாடுகளும் உள்ளன. மாற்றுத்திறனாளிகள் தங்களது 3 சக்கர நாற்காலியுடன் சிரமமின்றி ஏறி, இறங்கவும் தனி வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

குடிநீர், கழிவறை, மொபைல் சார்ஜ் செய்யும் வசதி என நவீன வசதியுடன் சொகுசு பேருந்தாக இது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்து இயக்கப்பட்டு வெற்றிகரமாக இயங்கினால் மாநிலத்தில் உள்ள பிற டீசல் பேருந்துகள் மாற்றப்பட்டு பேட்டரி பேருந்தகளை பெருமளவு இயக்க கேரள அரசு திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து கேரள மாநில போக்குவரத்துதுறை அமைச்சர் டோமின் தஞ்சன்காரி கூறுகையில் ‘‘சோதனை அடிப்படையில் இந்த பேருந்தை இயக்கியுள்ளோம். அடுத்த 6 மாதங்களுக்குள் மாநிலத்தின் பல பகுதிகளிலும் 300 பேருந்துகளை இயக்கவுள்ளோம். குறிப்பிட்ட நகரங்களுக்கு இடையில் இயக்கப்படும் டீசல் பேருந்துகள் முதல்கட்டமாக மாற்றப்பட்டு பேட்டரி பேருந்துகளாக இயக்கப்படும்’’ எனக்கூறினார்.

இந்தியாவில் இமாச்சல பிரதேசம், ஆந்திரா, கர்நாடக, மகாராஷ்டிரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்கெனவே பேட்டரி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தற்போது 6வது மாநிலமாக கேரளாவிலும் பேட்டரி பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x