

பதவி விலகிய மாவட்ட பெண் நீதிபதி ஒருவரால் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள மத்தியப் பிரதேச உயர்நீதிமன்ற நீதிபதிக்கு உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியர் நகரில் கூடுதல் மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிபதியாக பணி யாற்றிய பெண் நீதிபதி ஒருவர், அம்மாநில உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் கூறியிருந்தார். இப்புகார் தொடர்பாக விசாரணைக் குழு ஒன்றை நியமித்து ம.பி. உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இம்மாதம் 8-ம் தேதி உத்தரவிட்டார்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண் நீதிபதி உச்ச நீதிமன்றத்தை அணுகினார். அவர் தனது மனுவில், “எனது புகாரை ம.பி.க்கு வெளியில் உள்ள உயர் நீதி மன்றங்களைச் சேர்ந்த 2 தலைமை நீதிபதிகள், ஒரு நீதிபதி அடங்கிய குழு விசாரிக்க வேண்டும். நெருக்குதல் காரணமாக நான் பதவியை ராஜினாமா செய்ததால் எனக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும்” என்று கோரியிருந்தார்.
இம்மனு நீதிபதி ஜே.எஸ்.கேகர் தலைமையிலான அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது புகாருக்கு ஆளாகியுள்ள நீதிபதிக்கும், உச்ச நீதிமன்ற இயக்குநர், ம.பி. உயர்நீதிமன்ற பதிவாளர் ஆகியோருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் ம.பி. உயர்நீதிமன்றம் நியமித்த விசாரணைக் குழுவுக்கும் நீதிபதிகள் இடைக்காலத் தடை விதித்தனர்.
நீதித்துறைக்கு களங்கம்
இதனிடையே உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருப்ப தன் மூலம், நீதித்துறையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாக முன்னணி வழக்கறிஞரும் பெண்ணியவாதியு மான இந்திரா ஜெய்சிங் கூறினார்.
இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை கூறும்போது, “இதன் மூலம் நீதிமன்றம் பெண்களுக்கு பாது காப்பற்ற இடம் என்று மக்கள் கருதத் தொடங்குவார்கள்” என்றார் அவர்.