Last Updated : 27 Jun, 2018 09:00 AM

 

Published : 27 Jun 2018 09:00 AM
Last Updated : 27 Jun 2018 09:00 AM

சிறை அதிகாரிகளுக்கு சசிகலா ரூ.2 கோடி லஞ்சம் வழங்கிய வழக்கில் தினகரன் ஆதரவாளர் புகழேந்திக்கு சம்மன்: 29-ம் தேதி ஆஜராக கர்நாடக லஞ்ச ஒழிப்புத் துறை உத்தரவு

சிறை அதிகாரிகளுக்கு சசிகலா ரூ.2 கோடி லஞ்சம் வழங்கியது தொடர்பான வழக்கில், டிடிவி தினகரன் ஆதரவாளர் புகழேந்திக்கு கர்நாடக லஞ்ச ஒழிப்புத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டணை பெற்ற சசிகலா, பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் சிறைத் துறை டிஐஜியாக இருந்த ரூபா, “சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக சிறைத் துறை டிஜிபி சத்தியநாராயண ராவ், கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார், துணை கண்காணிப்பாளர் அனிதா உள்ளிட்டோருக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது” என உள்துறை அமைச்சகத்தில் புகார் அளித்தார்.

இதை மறுத்த டிஜிபி சத்தியநாராயண ராவ், ரூபா மீது பெங்களூரு மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மான நஷ்ட வழக்கு தொடுத்துள்ளார். இதற்கு ரூபா, “சசிகலா ரூ.2 கோடி லஞ்சம் வழங்கியது உண்மைதான். சிறைக்கு வெளியே உள்ள அவரது ஆதரவாளர்கள் மூலம் இந்த பணம் கைமாறியுள்ளது. தேர்தல் ஆணையத்துக்கு டிடிவி தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றதாக பதிவாகியுள்ள வழக்கில் தொடர்புடைய ஆஸ்திரேலியா பிரகாஷ், பெங்களூருவைச் சேர்ந்த டிடிவி தினகரனின் ஆதரவாளர்கள் சிலருக்கு தொடர்பு இருக்கிறது” என்றார்.

இந்நிலையில் டிஐஜி ரூபாவின் புகார் குறித்து ஐஏஎஸ் அதிகாரி தலைமையிலான உயர்மட்ட குழுவும், கர்நாடக லஞ்ச ஒழிப்புத் துறையும் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக விசாரித்து வருகிறது. முதல் கட்டமாக டிஜிபி சத்தியநாராயண ராவ், டிஐஜி ரூபா, சிறைத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் விசாரிக்கப்பட்டது. டிஐஜி ரூபா அளித்த புகாரின் அடிப்படையில் ஆஸ்திரேலியா பிரகாஷ், டிடிவி தினகரனின் ஆதரவாளர்கள் சிலரையும் விசாரிக்க திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் கர்நாடக லஞ்ச ஒழிப்புத் துறை பெங்களூருவில் உள்ள டிடிவி தினகரனின் ஆதரவாளர் புகழேந்திக்கு சம்மன் அனுப்பி உள்ளது. அதில், “சிறை அதிகாரிகளுக்கு சசிகலா ரூ.2 கோடி லஞ்ச கொடுத்ததாக பதிவாகியுள்ள வழக்கில் வரும் 29-ம் தேதி 11-மணிக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து புகழேந்தி கூறும்போது, “சொத்துக்குவிப்பு வழக்கில் பிணை வழங்க சசிகலாவுக்கு பிணைத் தொகை செலுத்தியதில் இருந்து என் மீது இத்தகைய நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. சசிகலாவையும், தினகரனையும் ஆதரிக்கும் ஒரே காரணத்துக்காக என் வீட்டில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளன.

இப்போது சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக பதிவாகியுள்ள‌ வழக்கில் விளக்கம் கேட்டு இருக்கிறார்கள். இந்த விவகாரத்திற்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. லஞ்ச ஒழிப்புத் துறையில் ஆஜராகி உரிய விளக்கம் அளிக்க தயாராக இருக்கிறேன்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x