Published : 16 Jun 2018 09:25 AM
Last Updated : 16 Jun 2018 09:25 AM

திருப்பதி ஏழுமலையான் கோயில் நமது கலாச்சாரத்தின் சின்னம்: ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் பெருமிதம்

திருப்பதி ஏழுமலையான் கோயில் நமது இந்திய கலாச்சாரத்தின் சின்னமாக விளங்குகிறது என நேற்று சுவாமியை தரிசித்த மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார்.

ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தனது குடும்பத்தினருடன் நேற்று காலை திருமலையில் ஏழுமலையானை தரிசிக்க சென்றார். அவரை தேவஸ்தான இணை நிர்வாக அதிகாரி ஸ்ரீநிவாச ராஜு மற்றும் அர்ச்சகர்கள் வரவேற்று தரிசன ஏற்பாடுகளை செய்தனர். தரிசனத்துக்கு பின்னர் அவருக்கு ரங்கநாயக மண்டபத்தில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஏழுமலையான் கோயிலுக்கு நாடு முழுவதிலும் இருந்து வந்து, திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர். ஜாதி, மொழி, இனம், மாநிலங்கள் போன்ற எந்தவித பேதமுமின்றி, நம் நாட்டு மக்கள் அனைவரையும் நாம் இங்கு தினமும் காணலாம். ஆதலால், இக்கோயில் நம்முடைய கலாச்சாரத்தின் சின்னமாக விளங்குகிறது. மேலும், திருமலைக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் தேவஸ்தானத்தினர் செய்துள்ளனர். இங்கு சுற்றுசூழல் மிகவும் நன்றாக பராமரிக்கப்பட்டு வருகிறது. இதற்காக தேவஸ்தான அதிகாரிகளை நான் வெகுவாக பாராட்டுகிறேன்.

இவ்வாறு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார். அதன் பின்னர் அவர், கார் மூலமாக திருச்சானூர் சென்று, குடும்பத்தாருடன் பத்மாவதி தாயாரை தரிசனம் செய்தார். அவருக்கு பத்மாவதி தாயார் கோயில் அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்கள் வழங்கி கவுரவித்தனர். அதன் பின்னர் அவர், கோயிலுக்கு வெளியே உள்ள ஒரு சிறிய ஓட்டலில் சாதாரண பக்தரை போன்று சென்று டீ குடித்து விட்டு சென்றார்.

18 மணி நேரம்

ஏழுமலையானை தரிசிக்க நேற்று 18 மணி நேரம் வரை ஆனது. ரம்ஜான் விடுமுறை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என தொடர்ந்து 2 நாட்கள் விடுமுறை வந்ததால், ஏழுமலையானை தரிசிக்க கூட்டம் அலைமோதுகிறது. இதனால் நேற்று சர்வ தரிசனத்தில் சுவாமியை தரிசிக்க 18 மணி நேரம் வரை ஆனது. ரூ.300 சிறப்பு கட்டண தரிசனத்தில் சென்ற பக்தர்கள் 4 மணி நேரத்திலும், திவ்ய தரிசனம் மூலம் மலையேறி சென்ற பக்தர்கள் 3 மணி நேரத்திலும் தரிசனம் செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x