

புதுடெல்லி: கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கியது. இதை கண்டிக்கும் விதமாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள், ரஷ்யா மீது பொருளாதார தடைகள் விதித்தன.
இதனால், ரஷ்யா அதன் கச்சா எண்ணெய்யை குறைந்த விலைக்கு விற்கும் கட்டாயத்துக்கு தள்ளப்பட்டது. இதை வாய்ப்பாக பயன்படுத்தி, ரஷ்யாவிடமிருந்து இந்தியா அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய ஆரம்பித்தது. இதுகுறித்து மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி நேற்றுமுன்தினம் கூறிய தாவது: ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்காவிட்டால் சர்வதேச அளவில் கச்சா என்ணெய் விலை 200 டாலரைத் தாண்டி இருக்கும். அது உலக பொருளாதாரத்தில் பெரும் தாக்கம் செலுத்தி இருக்கும். அந்த வகையில் இந்தியாவின் முடிவால் சர்வதேச கச்சா எண்ணெய் விலை ஏற்றம் தடுக்கப்பட்டிருக்கிறது.
எங்களைப் பொறுத்தவரையில் யார் குறைந்தவிலையில் கச்சா எண்ணெய் தருகிறார்களோ அவர்களிடமிருந்து இறக்குமதி செய்வோம். எங்கள் மக்களின் சுமையை குறைப்பதே எங்கள் நோக்கம். எங்கள் முடிவால் உலக நாடுகள் பலன் அடைந்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.