ஜமாத்-இ-இஸ்லாமி ஆதரவுடன் பிரியங்கா போட்டி: கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு

ஜமாத்-இ-இஸ்லாமி ஆதரவுடன் பிரியங்கா போட்டி: கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு
Updated on
1 min read

‘‘கேரளாவின் வயநாடு தொகுதி இடைத் தேர்தலில் ஜமாத்-இ-இஸ்லாமி ஆதரவுடன் , காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி களம் இறங்குவதால், அக்கட்சி தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும்’’ என கேரளா முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

கேரளாவின் வயநாடு மக்களவை தொகுதியில் வரும் 13-ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் கேரள முதல்வரும், மார்க்சிஸ்ட் பொலிட்பீரோ உறுப்பினருமான பினராயி விஜயன் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

கேரளாவின் வயநாடு தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தல், காங்கிரஸ் கட்சியின் மதச்சார்பற்ற முகமூடியை முற்றிலும் அம்பலப்படுத்தியுள்ளது. இங்கு ஜமாத்-இ-இஸ்லாமி ஆதரவுடன் பிரியங்கா காந்தி களம் இறங்குகிறார். ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பின் செயல்பாடு பற்றி நமது நாடு நன்கு அறியும். இந்த அமைப்பின் கொள்கை, ஜனநாயக கொள்கைகளுடன் ஒத்துப் போகிறதா?

ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பு நாட்டையும் மதிப்பதில்லை, ஜனநாயகத்தையும் மதிப்பதில்லை. நாட்டின் நிர்வாக அமைப்பையும் அது மதிப்பதில்லை. இந்த அமைப்பு, நலக்கட்சி மூலமாக அரசியல் ஈடுபாடு என்ற போர்வையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த முகமூடி ஜம்மு காஷ்மீரில் வெளிப்படையாக தெரிந்தது.

ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடத்துவதற்கு நீண்டகாலமாக எதிர்ப்பு தெரிவித்து வந்த அமைப்பு ஜமாத்-இ-இஸ்லாமி. அது பிரிவினைவாதத்தை ஊக்குவித்துக் கொண்டிருந்தது. பிறகு அவர்கள் காஷ்மீரில் பாஜக.வுடன் கூட்டு சேர்ந்தார்கள். காஷ்மீரில் மார்க்சிஸ்ட் தலைவர் முகமது யூசப் தாரிகமி போட்டியிட்ட 3 இடங்களில் போட்டியிட ஜமாத்-இ-இஸ்லாமி திட்டமிட்டது. அவர்களின் நோக்கம் தாரிகமியை தோற்கடிப்பது. இதற்கு பாஜக தனது பங்களிப்பை அளித்தது. பயங்கரவாதிகள் மற்றும் பாஜக கூட்டணி ஏற்பட்டபோதிலும், மக்கள் தாரிகமியைத்தான் தேர்ந்தெடுத்தனர்.

காஷ்மீரில் உள்ள ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பில் இருந்து நாங்கள் வேறுபட்டவர்கள் என வயநாட்டில் உள்ள ஜமாத்-இ-இஸ்லாமி கூறுகிறது. ஆனால், அவர்களின் கொள்கை ஒன்றுதான். அவர்கள் ஜனநாயக அரசை ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால், இந்த முறை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு ஆதரவு அளிப்பதுபோல் உணர்கிறார்கள். மதச்சார்பின்மையை ஆதரிப்பவர்கள், பிரிவினைவாதத்தை எதிர்க்கக்கூடாதா? ஜமாத் இ-இஸ்லாமி அமைப்புடன் கூட்டணியை தக்கவைத்துக்கொள்ள, முஸ்லீம் லீக் உட்பட காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் சில ‘தியாகங்களை’ செய்வதாக தெரிகிறது. காங்கிரஸ் கட்சியால் ஜமாத்-இ-இஸ்லாமி ஓட்டுக்களை நிராகரிக்க முடியுமா?

தலச்சேரி இடைத்தேர்தலில், ஆர்எஸ்எஸ் ஓட்டுக்கள் எங்களுக்கு தேவை இல்லை என மார்க்சிஸ்ட் தலைவர் இஎம்எஸ் நம்பூதிரிபாத் கூறினார். இதுபோன்ற நிலைப்பாட்டை காங்கிரஸ் எடுக்குமா? இவ்வாறு பினராயி விஜயன் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in