

பாலிவுட் நடிகர் ஆமிர்கான் நடிப்பில் விரைவில் வெளிவரவுள்ள ‘பி.கே.’ திரைப்படத்தின் போஸ்டர் ஆபாசமாக இருப்பதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ஆமிர்கான் நடித்துள்ள ‘பி.கே.’ படம் வரும் டிசம்பர் 19-ம் தேதி திரையிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஒட்டப்பட்டிருக்கும் சுவரொட்டிகளில் ஆமிர்கான் ஆடையில்லாமல் இருப்பது போன்ற படம் வெளியாகியுள்ளது.
இதற்கு எதிராக இந்தூரைச் சேர்ந்த சட்டக்கல்லூரி முதலாமாண்டு மாணவர் அபிஷேக் பார்கவா, முதலாவது ஜுடிஷியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: “ஆமிர்கானின் பி.கே. திரைப்பட நிர்வாண போஸ்டர், சமூகத்தில் ஆபாசத்தையும், இது போன்ற அருவருக்கத்தக்க செயல்களையும் ஊக்குவிக்கும் வகையில் இருக்கிறது. எனவே, உரிய பிரிவுகளின் கீழ் ஆமிர்கான் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு மீதான விசாரணை வரும் அக்டோபர் 15-ம் தேதி நடைபெறும் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.