சிவப்பு நிற அரசியலமைப்பு புத்தக சர்ச்சை: பாஜக விமர்சனமும் ராகுல் காந்தி பதிலடியும்

சிவப்பு நிற அரசியலமைப்பு புத்தக சர்ச்சை: பாஜக விமர்சனமும் ராகுல் காந்தி பதிலடியும்
Updated on
1 min read

புதுடெல்லி: நாக்பூரில் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ராகுல் காந்தி கையில் வைத்திருந்த சிவப்பு நிற அரசியலமைப்பு புத்தகம் தொடர்பான பாஜகவின் குற்றச்சாட்டுக்கு ராகுல் காந்தி விளக்கம் அளித்துள்ளார்.

தேர்தலில் வெற்றி பெற நகர்ப்புற நக்சல்களின் உதவியை காங்கிரஸ் நாடுவதாக பாஜக மூத்த தலைவரும், மகாராஷ்டிரா துணை முதல்வருமான தேவேந்திர பட்நாவிஸ் விமர்சித்துள்ளார். மேலும் 'நகர்ப்புற நக்சல்கள்' மீதான ராகுல் காந்தியின் ஆர்வம் உண்மை என்பதும் நிரூபணம் ஆகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி கூறியிருப்பதாவது: மகாராஷ்டிராவின் தேவேந்திர பட்னாவிஸின் கூற்றுப்படி, பாபாசாகேபின் அரசியலமைப்பைக் காட்டி, ஜாதிக் கணக்கெடுப்புக்காகக் குரல் எழுப்புவது நக்சலைட் யோசனை என்று கூறுகிறார். பாஜகவின் இந்த எண்ணம், அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய மகாராஷ்டிராவின் மகன் அம்பேத்கரை அவமதிக்கும் செயலாகும். பாஜகவால் அம்பேத்கர் அவமதிக்கப்படுவதை மகாராஷ்டிர மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். காங்கிரஸ் மற்றும் மஹா விகாஸ் அகாதி கூட்டணியுடன் சேர்ந்து, நமது அரசியலமைப்பின் மீதான ஒவ்வொரு தாக்குதலுக்கும் முழு பலத்துடன் பதிலடி கொடுத்து பாதுகாப்பார்கள்” இவ்வாறு ராகுல் தெரிவித்துள்ளார்.

முன்னதாக மகாராஷ்டிர பாஜக வெளியிட்டுள்ள பதிவில், “இந்திய அரசியலமைப்பை அழிக்க நினைக்கிறது காங்கிரஸ். பாபாசாகேப் அம்பேத்கர் எழுதிய அனைத்து சட்டங்களும் நீக்கப்பட வேண்டும். எனவே இடைக்கால இடஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என்று ராகுல் காந்தி கணித்திருந்தார்” என்று விமர்சித்திருந்தது.

இன்னொருபுறம் நாக்பூர் நிகழ்ச்சியில் பார்வையாளர்களுக்கு வழங்கப்பட்ட அரசியலமைப்பு புத்தகத்தின் உட்புறம் வெற்று காகிதங்கள் மட்டுமே இருந்ததாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது. இதற்கு விளக்கம் அளித்துள்ள காங்கிரஸ் கட்சி, அது பார்வையாளர்களுக்கு வழங்கப்பட்ட நோட்டுப் புத்தகம் என்றும் பாஜக உள்நோக்கத்துடன் அவதூறு பரப்புவதாகவும் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in