போலீஸ் அதிகாரியை மிரட்டியதாக மத்திய அமைச்சர் குமாரசாமி மீது வழக்குப்பதிவு

போலீஸ் அதிகாரியை மிரட்டியதாக மத்திய அமைச்சர் குமாரசாமி மீது வழக்குப்பதிவு
Updated on
1 min read

சென்னை: க‌ர்நாடகாவை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியை மிரட்டியதாக மத்திய அமைச்சர் குமாரசாமி மீது பெங்களூரு போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கர்நாடக லோக் ஆயுக்தாவின் சிறப்பு புலனாய்வு பிரிவு ஐஜி சந்திரசேகர் பெங்களூருவில் உள்ள சஞ்சய் நகர் காவல் நிலையத்தில் நேற்று புகார் ஒன்றை அளித்தார். அதில், ''மத்திய கனரக மற்றும் தொழில் துறை அமைச்சர் குமாரசாமி, அவரது மகன் நிகில், குமாரசாமியின் ஆதரவாளர் சுரேஷ் குமார் ஆகியோர் கடந்த 28-ம் தேதி முதல் எனக்கு எதிராக ஊடகங்களில் அவதூறு பரப்பி வருகின்றனர்.

ஒரு தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் ஒதுக்கியதில் முறைகேடு செய்ததாக கூறினர். என் மீதான ஊழல் புகாரை சாதாரணமாக என்னால் கடந்து செல்ல முடியாது. உண்மைக்கு புறம்பான தகவல்களை பேசிவருவதால் எனக்கு கடும் மன உளைச்சல் ஏற்பட்டது. இதுகுறித்து அவர்களிடம் விளக்கம் கேட்ட போது, என்னை மிரட்டும் விதமாக பேசினர்" என தெரிவித்திருந்தார்.

இதையடுத்து சஞ்சய் நகர் போலீஸார் மத்திய அமைச்சர் குமாரசாமி, அவரது மகன் நிகில், ஆதராவளர் சுரேஷ் குமார் ஆகிய மூவர் மீதும் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பெங்களூரு போலீஸாரின் இந்த நடவடிக்கைக்கு மஜத, பாஜக ஆகிய எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in